`99.3 சதவிகித பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன!’ - 2 ஆண்டுகளுக்குப் பின் ஆர்.பி.ஐ அறிவிப்பு

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 99.3 சதவிகித 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. 

ரூபாய் நோட்டுகள்

கள்ள நோட்டுகளை ஒழிப்பது, கறுப்புப் பணப் புழக்கத்தைக் குறைப்பது மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளைத் தடுக்க, புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ல் மத்திய அரசு அறிவித்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டு, நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, `அரசின் இந்த நடவடிக்கையால் புழக்கத்தில் உள்ள 5 முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளிவரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  அதற்குப் பதிலாக, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதேநேரம், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏறக்குறைய 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், வங்கிகள்மூலம் திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகள் குறித்த தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, புழக்கத்தில் இருந்த ரூ.15.41 லட்சம் கோடி மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில், ரூ.15.31 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இது, 99.30 சதவிகிதம் ஆகும். இந்தத் தகவல், ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் கணக்கின்படி ரூ.10,270 கோடி மதிப்பிலான பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை என்பது தெரியவருகிறது. 

ரிசர்வ் வங்கி

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், 2016-17 -ம் ஆண்டில் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ.7,965 கோடியை ரிசர்வ் வங்கி செலவிட்டிருக்கிறது. இது, அதற்கு முந்தைய ஆண்டில் செலவிடப்பட்ட தொகையான ரூ.3,421 கோடியைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். அதேபோல, 2017-18 (ஜூலை 2017 முதல் ஜூன் 2018) வரையிலான காலகட்டத்தில், ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ.4,912 கோடியை ரிசர்வ் வங்கி செலவிட்டிருக்கிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!