வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (29/08/2018)

கடைசி தொடர்பு:17:00 (29/08/2018)

``இணையப் போர்; புதிய எதிரி..!'' எச்சரிக்கும் வெங்கைய நாயுடு

``இணையப் போர் என்ற புதிய சகாப்தம் உருவாகியுள்ளது. இந்தப் புதிய எதிரியை அறிவின் சக்தி மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்''என்று டெல்லியில் நடைபெற்ற காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் 48-வது அமைப்பு தின நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கைய நாயுடு வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை இணைய அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

வெங்கையா நாயுடு


வெங்கைய நாயுடு பேசுகையில்,``ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து இணையத்தின் வழியாக தகவல்களைத் திருடி, குற்றங்கள் செய்வோருக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேசப் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் இத்தகைய தாக்குதல்களைக் கையாள காவல்துறையினரை தயார்படுத்த வேண்டும். புதிய முறையில் அதிகரித்து வரும் தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சிறந்த செயல்முறைகளையும், கொள்கைகளையும், நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும். இணைய வழித் தாக்குதல்களை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை எதிர்கொள்ளும் காவல்துறையின் திறன்களை அதிகரிக்க வேண்டும். 

இணையப் பரப்பில் உருவாகிவரும் புதிய எதிரியை முறியடிப்பதற்கு, நான்கு சுவர்களுக்குள் இருந்து செயல்படும் அரசின் ஒரேயொரு துறையால் மட்டுமே இயலாது. நவீனப் போர் முறையால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் உட்பட, எதிர்காலச் சவால்களுக்கு ஏற்ப காவல் துறையை உருவாக்குவதற்கு அரசும், தனியார் துறையினரும் கூட்டான வழிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்துக் காவல் படையினரும், இணையக் குற்றத்தின் தடயவியல் தொழில்நுட்பங்கள், இணைய வழித் தாக்குதலை எதிர்கொள்ளும் அறிவுக் கூர்மை, இணைய வழிக் குற்றப் புலனாய்வு ஆகியவற்றில் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க