வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (29/08/2018)

கடைசி தொடர்பு:18:00 (29/08/2018)

`தேர்தலை சந்திக்க முன்னோட்டாமா?’ - எழுத்தாளர் வரவர ராவ் கைதுக்கு த.மு.எ.க.ச கண்டனம் 

கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சல்வெஸ், அருண் ஃபெரைரா, எழுத்தாளர் வரவர ராவ் ஆகிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான மகாராஷ்டிரா போலீஸாரின் அத்துமீறல்களுக்கு த.மு.எ.க.ச கண்டனம் தெரிவித்துள்ளது. 

வர வர ராவ்

 

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ``பீமா கோரேகான் போர் வெற்றியின் 200-ம் ஆண்டுவிழாவைக் கொண்டாடச் சென்ற தலித்துகள் மீது இந்துத்துவ அமைப்பினர் நடத்திய கொடிய தாக்குதல் உலகளாவிய கண்டனத்தைப் பெற்றது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை கோரி நடந்த போராட்டங்களைப் பயங்கரவாத நடவடிக்கையாக சித்திரித்து ஒடுக்குவதில் மும்முரம் காட்டி வருகிறது மகாராஷ்டிரா காவல்துறை. இதுதொடர்பில் சுதிர் தாவ்லே, சுரேந்தர் கட்லிங், மகேஷ் ரௌட், ஷோமா சென், ரொனா வில்சன் உள்ளிட்ட தலித் அமைப்பினரையும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும், வழக்கறிஞர்களையும், ஊடகவியலாளர்களையும் கடந்த ஜூன் மாதத்தில் கைதுசெய்த மகாராஷ்டிர காவல்துறை அடுத்தகட்ட கைதுகளை நடத்தியுள்ளது.

தலித்துகள், பழங்குடிகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் நலனைக் காப்பதிலும், மத்திய அரசின் மக்கள்விரோதத் திட்டங்களை எதிர்ப்பதிலும், சங்பரிவாரத்தின் இந்துத்துவ வெறுப்பரசியலை விமர்சிப்பதிலும் முன்னணியில் இயங்கும் கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சல்வெஸ், அருண் ஃபெரைரா, எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோர், மகாராஷ்டிர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது மடிக்கணினி, செல்பேசி, பென் டிரைவ் ஆகியவையும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்களது சமூக ஊடகங்களின் கணக்குகளும் காவல்துறைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கல்வியாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளரும் அண்ணல் அம்பேத்கரது குடும்ப உறுப்பினருமான ஆனந்த் டெல்டும்டேவின் வீடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

நாடறிந்த ஆளுமைகளான இவர்களுக்கே இந்த கதியா என்கிற பீதிக்குள் கருத்தியல் தளத்தில் இயங்குகிறவர்களை மூழ்கடித்து, சுயதணிக்கையின் மூலம் அவர்கள் தம்மைத்தாமே முடக்கிக் கொள்ளும் நிலையை உருவாக்க ஆட்சியாளர்கள் முயல்கின்றனர். நாட்டை வழிநடத்திச் செல்லும் பொறுப்பிலிருந்து வழுவி பல்வேறு முனைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள பா.ஜ.க, தனக்கெதிரான விமர்சனங்களின் கழுத்தை நெறித்துவிட்டு தேர்தலைச் சந்திக்க தயாராகி வருவதன் முன்னோட்டமாக இத்தகைய நடவடிக்கைகளைக் கருத இடமுண்டு. அதற்காக அது அரசதிகார அமைப்புகளை சட்டநியதிகளுக்குப் புறம்பாக, பழிவாங்கும் இயந்திரமாகப் பயன்படுத்தி வருகிறது.

திவ்யபாரதி, திருமுருகன் காந்தி, வளர்மதி போன்றோர் மீது தமிழக அரசும், பீமா கோரேகான் போராட்ட வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் மீது மகாராஷ்டிர அரசும் இழைத்துவரும் கொடுங்கோன்மைகளுக்கு இந்துத்துவவாதிகளின் எதேச்சதிகார கருத்தியலே காரணமாக இயங்குகிறது. மக்களின் உயிர்வாழும் உரிமை உட்பட அனைத்தையும் அரசுக்கும் அரசின் வழியாக ஆளுங்கட்சிக்கும் கீழ்ப்படுத்தும் இத்தகைய முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்று கூறியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க