வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (30/08/2018)

கடைசி தொடர்பு:08:30 (30/08/2018)

நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்? - கிராமப்புற மாணவர்களுக்காக மத்திய அரசின் திட்டம்!

நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

 நீட்

மருத்துவம் மற்றும் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட், ஜே.இ.இ ஆகிய நுழைவுத் தேர்வுகளில், கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்களும் தேர்ச்சிபெற இலவச பயிற்சி வகுப்புகளை மத்திய அரசு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக நடைமுறைக்கு வர உள்ள தேசிய தேர்வு முகமை (National testing agency) மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து மனிதவள மேம்பாடு அமைச்சக வட்டாரங்கள் கூறுவதாவது, `தேசிய தேர்வு முகமை அமைத்ததன்மூலம் போட்டித் தேர்வுகளைத் தனியார் நிறுவனங்கள் கையில் மத்திய அரசு ஒப்படைத்துவிட்டது எனக் கூறுவது முற்றிலும் தவறு. தனியார் பயிற்சி மையங்கள், நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் அதிக பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து அதிக கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கும் கல்வியில் சிறந்த மாணவர்களுக்காகவே தேசிய தேர்வு முகமைமூலம் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள், எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம்.  

நீட், ஜே.இ.இ ஆகிய தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,697 பயிற்சி மையங்கள் அடுத்த ஆண்டு முதல் கற்றல் மையங்களாக மாற்றப்படும். இதற்கான பயிற்சி மையங்கள், வரும் செப்டம்பர் 8-ம் தேதியில் செயல்படத் தொடங்கும். மொபைல் ஆப்கள் மற்றும் ஆன்லைன் மூலம் தேசிய தேர்வு முகமையில் பதிவுசெய்த மாணவர்களுக்கு, மாதிரி பரீட்சை நடத்தப்படும். இதற்கான விண்ணப்பப் பதிவு, வரும் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து தொடங்கப்படும்' எனத் தெரிவித்துள்ளனர்.