வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (30/08/2018)

கடைசி தொடர்பு:11:25 (30/08/2018)

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் - 168 அரசு மருத்துவமனைகள் சேதம்!

கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை பாதிப்பால் 168 அரசு மருத்துவமனைகள் சேதம் அடைந்துள்ளதாகவும், இதனால் 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

கே.கே.சைலஜா

கேரள மாநிலத்தைப் புரட்டிப்போட்ட மழையால் சேதமடைந்த சாலைகள், கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என ஒவ்வொரு துறை வாரியாக கணக்கெடுக்கும் பணிகள் நடந்துவருகின்றன. ஓணம் விடுமுறை மற்றும் மழையின் தாக்கம் குறைந்ததால், கேரள மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால், மழையால் சேதமடைந்த மற்றும் வெள்ளம் வடியாத 420 பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில், மழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் 168 அரசு மருத்துவமனைகள் சேதம் அடைந்துள்ளதாகவும், இதனால் 120 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில், "22 மருத்துவமனைகள் முழுமையாகத் தகர்ந்துவிட்டன, 50 மருத்துவமனைகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. 96 மருத்துவமனைகள் பாதி சேதம் அடைந்துள்ளன. கட்டடங்கள் உடைந்ததால், 80 கோடி ரூபாயும், மருத்துவ உபகரணங்கள் நாசமானதால் 10 கோடி ரூபாயும், 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபர்னிச்சர் களும், 20 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளும் மழையால் நாசமாயின" என்றார்.