வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (30/08/2018)

கடைசி தொடர்பு:17:35 (30/08/2018)

`நம் ஒற்றுமைதான் கேரளாவை முன்னோக்கிச் செல்லவைக்கும்'! சட்டப்பேரவையில் பினராயி நெகிழ்ச்சி

கேரளம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சட்டசபை கூட்டத்தில் 'பிக் சல்யூட்' தெரிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்.

பினராயி விஜயன்

கேரளத்தில் மழையால் ஏற்பட்ட அழிவு குறித்து விவாதிக்கச் சிறப்பு சட்டசபைக் கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் கூடியது. இதில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ``கேரளத்தில் ஏற்பட்ட மழை இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரளய கெடுதியாகும். இதில் 483 பேர் இறந்துள்ளனர். 14 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 59,296 பேர் இப்போதும் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். தன்னார்வலர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையாக நின்று மீட்புப்பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மீனவர்கள் லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றி கொண்டுவந்தார்கள். அனைத்துக்கட்சியினரும் ஓரணியாக நின்று உதவினார்கள். 7,443 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி மீட்புப்பணிக்கு உதவியது. 40,000 போலீஸ், 3,200 தீயணைப்பு வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் 'பிக் சல்யூட்' தெரிவித்துக்கொள்கிறேன்.

வி.எஸ்.அச்சுதானந்தன்

கடந்த மே மாதமே மழையை எதிர்கொள்ளத் தயாரானோம். ஆனால், நாம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய இயற்கை பேரிடர் நடந்து முடிந்துவிட்டது. மத்திய வானிலை மையம் கூறியதைவிட பல மடங்கு மழை பெய்தது. மாநிலத்தில் உள்ள 82 அணைகளும் நிரம்பி வழிந்தன. நிலச்சரிவால் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டன. ஆகஸ்ட் 29-ம் தேதிவரை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 730 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. அடுத்தகட்டமாகப் புனரமைக்கும் பணி நம் முன் இருக்கிறது. மின்சாரம், குடிநீர், சாலைப் போக்குவரத்து ஆகியவற்றைச் சீரமைக்க வேண்டும். நம் ஒற்றுமை என்ற சக்தியால் கேரளத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

ஓ. ராஜகோபால்

முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பேசுகையில், ``இனி இதுபோன்ற இடர்பாடுகள் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும். மூணாறு பகுதியில் அனுமதி இல்லாமல் கட்டடங்கள் கட்டியவர்கள், ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஓ. ராஜகோபால், ``மழை நிவாரண நிதிகளை வெளிப்படையாகச் செலவு செய்ய வேண்டும். சுனாமியின்போது நிதியைக் குளறுபடியாக பயன்படுத்தியதுபோன்று செயல்படக்கூடாது" என்றார்.