`வெள்ளம் வடிந்தும் நகராத பாம்புகள்!’ - கேரள மக்களுக்குத் துணையான வாவா சுரேஷ் | Vava Suresh tackles snake in flood-hit areas of Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (30/08/2018)

கடைசி தொடர்பு:18:10 (30/08/2018)

`வெள்ளம் வடிந்தும் நகராத பாம்புகள்!’ - கேரள மக்களுக்குத் துணையான வாவா சுரேஷ்

கேரள வெள்ளம்

கேரள கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் முகாம்களில் அடைக்கலமான மக்கள், மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அங்கு அவர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்து வருகின்றன நச்சுப் பாம்புகள்.

மழை வெள்ளம் வடிந்த பிறகு, குடியிருப்புகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் கேரள மக்கள். அங்கு அவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட விஷப் பாம்புகள். இதன் காரணமாக, பாம்பு கடித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பாம்புக் கடிக்கான விஷ எதிர்ப்பு மருந்துகளை அனைத்து மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில், பாம்புகளைப் பிடிக்கும் வாவா சுரேஷ் என்பவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. திருவனந்தபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் வாவா சுரேஷ். இதுவரையில் சுமார் 50,000 பாம்புகளைப் பிடித்துள்ளார். 

வாவா சுரேஷ்

இதுகுறித்துப் பேசும் வாவா சுரேஷ், ``வீட்டுக்குள் புகுந்த பாம்புகளைப் பிடித்துச் செல்லுமாறு இதுவரை 22 போன் கால்கள் வந்துள்ளன. தற்போது வரை 140 ராஜ நாகப் பாம்புகளைப் பிடித்துள்ளேன். எர்ணாகுளம் மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி மட்டும் 5 ராஜ நாகங்களைப் பிடித்துச் சென்றேன். மேலும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இருப்பிடங்களுக்குள் புகுந்த பாம்புகளைப் பிடிக்க சென்றேன். பாம்புகளைக் கண்ட மக்கள் பதறிப்போய், 'கொடிய விஷம் உடைய பாம்பு புகுந்துவிட்டது' எனக் கூறி போன் செய்வார்கள். அங்கு சென்று பார்த்தால் அந்தப் பாம்புகள் விஷத் தன்மையில்லாதவை' என்றார் இயல்பாக. இதுவரையிலும் 100 பாம்புகளிடம் கடி வாங்கியிருக்கிறார் வாவா சுரேஷ், இருப்பினும், பாம்புக் கடிக்காக 6 முறை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.