சமாஜ்வாடியில் புதிய கட்சி பிறப்பது ஏன்? ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்! | Reason for starting a new party inside samajwadi

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (30/08/2018)

கடைசி தொடர்பு:22:00 (30/08/2018)

சமாஜ்வாடியில் புதிய கட்சி பிறப்பது ஏன்? ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்!

சிவபால் சிங், சமாஜ்வாடி மதச்சார்பற்ற மோர்சா என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகும் இந்த நேரத்தில் சிவபால் சிங், சமாஜ்வாடி கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சியைத் தோற்றுவித்திருப்பது அந்தக் கட்சியினருக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

சமாஜ்வாடியில் புதிய கட்சி பிறப்பது ஏன்? ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்!

மாஜ்வாடியில் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்னையால், தற்போது இன்னொரு 'சமாஜ்வாடி' உதயமாகியிருக்கிறது. இதனால் வரவிருக்கும் தேர்தல்களில் அந்தக் கட்சியின் வாக்குகள் சிதறும் என்று சொல்லப்படுவதோடு, அது எதிர்க்கட்சியின் வெற்றிக்கும் வழிவகுக்கும் என்கிறார்கள், அரசியல் ஆர்வலர்கள். 

இன்று, சமாஜ்வாடியில் புதிய கட்சி பிறப்பதற்கு என்ன காரணம்... இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்!

உத்தரப்பிரதேசத்தை இன்று பி.ஜே.பி. ஆட்சி செய்வதற்கு சமாஜ்வாடியில் எழுந்த உட்கட்சிப் பூசலும் ஒரு காரணம். சமாஜ்வாடியில் குடும்ப அரசியல் சங்கமித்திருந்ததே உட்கட்சிப்பூசலுக்கு வித்திட்டது. எம்.பி-க்கள் அதிகளவில் இருக்கும் அந்த மாநிலத்தில், கணிசமான எம்.பி-க்களைப் பெற்றுவிட்டால் பிரதமராகி விடலாம் என்ற ஆசை, மூன்று முறை முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவுக்குத் துளிர்விட... மகன் அகிலேஷை அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்தார், தந்தை. ஆட்சியை அகிலேஷ் வைத்திருந்தாலும், அதிகாரத்தை முலாயமே வைத்திருந்தார். காலப்போக்கில், குடும்ப அரசியல் தலை தூக்குவதைக் கண்ட அகிலேஷ், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்ததோடு, அதை எதிர்க்கவும் செய்தார். இதனால் கட்சிக்குள் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் இந்த மோதல் முலாயம் சிங்கிடம் சமாதானத்துக்குப் போகவே, தன் மகன் அகிலேஷை மாநில கட்சித் தலைவர் பதவியிலிருந்து மாற்றி, தன் தம்பி சிவபால் சிங்கை அந்தப் பதவியில் அமர்த்தினார். இதையடுத்து, அடுத்த ஆயுதத்தை எடுத்த அகிலேஷ் யாதவ், சிவபால் சிங்கின் அமைச்சர் பதவியைப் பறித்தார். இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியின் வெள்ளிவிழாவின்போது பேசிய சிவபால் சிங், ``என்னிடமிருந்து எந்த மாதிரியான தியாகங்களை வேண்டுமென்றாலும், அகிலேஷ் யாதவ் கேட்டுப் பெறலாம். நான், எப்போதும் முதல்வராக விரும்பியதில்லை. நீங்கள் (அகிலேஷ்) என்னை அவமதித்தாலும் சரி, என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினாலும் சரி, கட்சிக்காகவும்... நாட்டு மக்களுக்காகவும் ரத்தம் சிந்துவேன். நல்லதே செய்வேன்'' என்றார். ஆனாலும், சிவபால் சிங்குக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. சில நாள்கள் பொறுமை காத்த சிவபால் சிங், அடுத்து அதிரடியாய்க் களமிறங்கினார்; அகிலேஷின் ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கினார்.

முலாயம் சிங்

இப்படி அவர்கள் இருவருக்குள்ளும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில்தான், உத்தரப்பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தலும் (கடந்த ஆண்டு) வந்தது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடக்க... அகிலேஷின் ஆதரவாளர்கள் சிலரை மட்டும் உள்ளடக்கி, கட்சித் தலைவர் என்ற முறையில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார், சிவபால் சிங். தன்னுடைய ஆதரவாளர்களின் பெயர்கள் பல விடுபட்டிருப்பதை அறிந்து தந்தையிடம் சென்ற அகிலேஷ், ``என்மீது கோபம் இருந்தால் என்னைத் தண்டியுங்கள்... என் ஆதரவாளர்களைப் பழிவாங்காதீர்கள்'' என்று முறையிட்டார். ஆனாலும், அவருடைய முறையிடலால் எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை. மீதமிருந்த தொகுதிகளுக்கும் அகிலேஷின் ஆதரவாளர்கள் இல்லாமல் பட்டியல் வெளியிடப்பட்டதே அதற்குக் காரணம். இனிமேலும் பொறுமை காத்தால் அது, நல்லதல்ல என்று எண்ணிய அகிலேஷ், சுதாரிக்கத் தொடங்கினார்; சூப்பர் மேனாக மாறினார். விளைவு, அவர்களுக்குப் போட்டியாய் ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுப் பரபரப்பை உண்டாக்கினார். கட்சிக்கு எதிராக அகிலேஷ் செயல்பட்டதையடுத்து, ``எந்த அப்பாவும் தன் மகனுடைய எதிர்காலத்தைச் சீரழிக்க மாட்டார். ஆனால், வேறு வழியில்லை. எனக்கு மகனைவிடக் கட்சி முக்கியம்'' என்று சொன்ன தந்தை முலாயம், அவரைக் கட்சியிலிருந்தே நீக்கினார். அதற்கு, ``நான் ஏன் போக வேண்டும்... கட்சிக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தத் தயாரானார். மறுபுறம், முலாயம் யாதவும் ஒரு கூட்டத்தை நடத்தினார். ஆனாலும், அகிலேஷின் ஆதரவாளர்கள் பக்கமே கட்சி சென்றது. அதேநேரத்தில் அப்பா - மகன் இடையே சமரச பேச்சுவார்த்தையும் செய்யப்பட்டது. அந்த அடிப்படையில், சித்தப்பாவை (சிவபால்) கட்சியிலிருந்து ஒதுக்குமாறும், மீண்டும் கட்சித் தலைவர் பதவியைத் தனக்கே வழங்குமாறும் கேட்டார் அகிலேஷ். இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, முலாயம். அதன் விளைவு, கட்சி மொத்தமும் அகிலேஷ் பக்கமே சாய்ந்தது. அவர் பக்கம் நின்றவர்களும், ``முலாயம் சிங் யாதவை நாங்கள் மதிக்கிறோம்.. ஆனால், அவர் கடந்த காலம். அவர் பின்னால் போவதால் எந்த ஆதாயமும் இல்லை. அகிலேஷ் யாதவ்தான் எங்கள் எதிர்காலம். எல்லோரும் அவர் பின்னால் போவதில் வியப்பில்லை'' என்றனர். 

ஆதரவாளர்கள் நம்மிடம்தான் இருக்கிறார்கள் என்று ஆரவாரத்துடன் இருந்த அகிலேஷ் யாதவுக்கு அப்போது தெரிந்திருக்காது, நாம் தப்புக் கணக்குப் போட்டுவிட்டோம் என்று. ஆம், அவர்களுடைய உட்கட்சிப் பூசலால் அவரையே தோற்றுப்போகும் நிலைக்குத் தள்ளியது தேர்தல். இதை நல்லதொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட பி.ஜே.பி., அந்த மாநிலத்தில் அதிகமான எம்.எல்.ஏ-க்களை வெற்றிபெறவைத்து ஆட்சியை இறுகப்பிடித்துக்கொண்டது. இதையே இன்னும் உணராத சமாஜ்வாடிக்கு, இப்போது இன்னொரு கட்சி உதயமாகிப் புயல்வீசத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், சமாஜ்வாடியின் மறைந்த மூத்த தலைவர் பகவதி சிங் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சிவபால் சிங், ``சமாஜ்வாடி, அகிலேஷ் கைக்கு மாறியபின், எனக்கு நல்ல பொறுப்பு கொடுப்பார்கள் என்று ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருந்தேன். ஆனால், எனக்கு எந்தவிதமான பொறுப்பும் அளிக்கவில்லை'' என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட முலாயம் சிங்கும், ``எனக்குக் கட்சியில் யாரும் மதிப்பளிப்பதில்லை. மதிப்பு கொடுப்பார்கள் என்று காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது'' என்று வருத்தப்பட்டுச் சொன்னார் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது. 

அகிலேஷ் யாதவ், சிவ்பால் யாதவ், சமாஜ்வாடி

இந்த நிலையில்தான் சிவபால் சிங், சமாஜ்வாடி மதச்சார்பற்ற மோர்சா என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகும் இந்த நேரத்தில் சிவபால் சிங், சமாஜ்வாடி கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சியைத் தோற்றுவித்திருப்பது அந்தக் கட்சியினருக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவபால் சிங், ``கடந்த இரண்டு ஆண்டுகளாக சமாஜ்வாடி கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை. உரிய மரியாதையும் கிடைக்கவில்லை. எனவேதான், புதிய கட்சி தொடங்கும் முடிவை எடுத்தேன். சமாஜ்வாடி உடைந்துவிடக்கூடாது என்பதற்காக நீண்டகாலம் பொறுமையாக இருந்தேன். அதற்குப் பலன் கிடைக்கவில்லை. சமாஜ்வாடி கட்சியில் புறக்கணிக்கப்பட்ட தலைவர்களும், தொண்டர்களும் அதிகமுள்ளனர். அவர்களின் ஆதரவு எனக்குக் கிடைக்கும். பி.ஜே.பி. அல்லது வேறு எந்தக் கட்சிகளிலும் நான் இணையப் போவதில்லை. முலாயமிடம் எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. சிறு கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன்'' என்றார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மாநில பி.ஜே.பி. செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, ``இந்தியாவில் குடும்ப அரசியல் நடக்கும் அனைத்துக் கட்சிகளிலும் இதுபோன்ற பிளவுகளும், சச்சரவுகளும் சகஜமானதுதான். உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே பலமிழந்துவிட்ட சமாஜ்வாடி கட்சியில் இருந்த குடும்பப் பிரச்னை, இப்போது அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது'' என்றார். 

முன்னதாக, சமாஜ்வாடியிலிருந்து வெளியேற்றப்பட்ட அமர் சிங், ``பி.ஜே.பி. தலைவர்களை சிவபால் சந்திக்க நான் ஏற்பாடு செய்தேன். அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை'' என்று சொல்லியிருந்ததும் புயலைக் கிளப்பியிருந்தது.

சிவபால் சிங்கின் புதுக்கட்சி குறித்து கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், ``எந்தச் சூழ்நிலை வந்தாலும் சமாஜ்வாடி கட்சி தொடர்ந்து தனது பாதையில் பயணிக்கும். இதன் பின்னணியில், பி.ஜே.பி. உள்ளது என்று நான் கூறவில்லை. எனினும், நேற்றைய நிகழ்வுக்கும், இன்றைய நிகழ்வுக்கும் தொடர்பிருப்பதாகச் சந்தேகம் எழுகிறது'' என்று தெரிவித்துள்ளார். 

``குடும்பத்தில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி தோல்வியுற்றது. இந்த நிலையில், மீண்டும் சமாஜ்வாடியிலிருந்து இன்னொரு கட்சி உதயமாகியிருப்பதால், அங்கிருக்கும் வாக்குகள் அனைத்தும் பிரிவதோடு அவற்றால்,  வரும் தேர்தல்களில் எதிர்க்கட்சிக்கே வாய்ப்பு ஏற்படும். இதை, இப்போதே சமாஜ்வாடி நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்கள், அரசியல் ஆர்வலர்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்