‘மனைவியின் மருத்துவச் செலவுக்காக 4 வயது குழந்தையை விற்க முயற்சி!’

மனைவியின் மருத்துவச் செலவுக்காக குழந்தையை விற்க முயன்ற அவலம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

குழந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னூஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள், அரவிந்த் பன்ஜாரா - சுக்தேவி தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் ரோஷினி, ஒரு வயதில் ஜானு என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்,  சுக்தேவி மூன்றாவது முறையாக  கர்ப்பமானார். 7-வது மாதத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், சிகிச்சைக்காக ரத்தம் ஏற்பாடுசெய்யும்படி கூறியுள்ளனர். ஏழ்மையில் இருக்கும் இவரால் சிகிச்சைக்காக ரத்தம் ஏற்பாடு செய்யவில்லை. மனைவியின் சிகிச்சைக்கு பணமில்லாததால், வேறு வழியின்றி குழந்தையை 25,000 ரூபாய்க்கு விற்க முடிவுசெய்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் அதைத் தடுத்து, அந்தப் பெண்ணுக்கு ஆகும் சிகிச்சைக்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக திர்வா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய அந்தத் தம்பதியினர், “ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரத்தம் வாங்கிவரச் சொன்னார்கள். இல்லையென்றால் என் மனைவியைக் காப்பாற்ற முடியாது எனக் கூறினர். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை அதனால்தான் குழந்தையை விற்க முடிவுசெய்தோம். குழந்தையை விற்பது என்பது எளிதான காரியம் இல்லை. ஏனென்றால், நாங்கள் சிகிச்சைக்காக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கிவிட்டோம் ” என்றனர்.

காவல்துறை தரப்பில், “ மருத்துவ சிகிச்சைக்குப் பணமில்லாத ஒரு தம்பதி, தங்களது குழந்தையை விற்க ஏற்பாடு செய்வதாக பொதுமக்கள்மூலம் தகவல் வந்தது. 4 வயது சிறுமியை விற்க முடிவு செய்துள்ளதாக அறிந்தோம். இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு ஆகும் மருத்துவச் செலவை திர்வா காவல் நிலையக் காவலர்களே ஏற்பது என முடிவுசெய்தோம். பணம் மட்டுமில்லாமல் அவர்களுக்குத் தேவையான ரத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!