‘கேரள வெள்ளம்’ - முதலமைச்சர் நிவாரண நிதியில் குவிந்த தொகை எவ்வளவு தெரியுமா? | Contribution to Kerala Chief Minister's Distress Relief Fund reaches Rs 1027 Crore

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (31/08/2018)

கடைசி தொடர்பு:09:30 (31/08/2018)

‘கேரள வெள்ளம்’ - முதலமைச்சர் நிவாரண நிதியில் குவிந்த தொகை எவ்வளவு தெரியுமா?

கேரளாவில், இந்த ஆண்டு கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை கேரள மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். அதே வேளை, தண்ணீரிலும் கண்ணீரிலும் தத்தளித்த மக்களுக்காக, மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்டிய ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களும் அதிகம் என்றே கூறலாம். 

கேரளா வெள்ளம்

கேரள வரலாற்றிலேயே 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித்தீர்த்த மழை, கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டது. வெள்ளம், நிலச்சரிவு,  சாலைகள் துண்டிப்பு என மழையால் ஏற்பட்டிருக்கும் சேதம் எண்ணில் அடங்காதவை. இதனிடையே, வெள்ளப் பாதிப்பால் ரூ.20,000 கோடிவரை சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,600 கோடி தேவைப்படுவதாகவும் மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 

கேரளா மீட்பு பணி

வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் மட்டுமல்லாமல் உள்நாட்டு சுற்றுலாப் பிரியர்களையும் அதிகம் ஈர்க்கும் கேரளாவை மறுசீரமைக்க நிவாரண நிதியுதவிகள் மற்றும் நிவாரணப் பொருள்கள் வந்தவண்ணம் உள்ளன. தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, மருந்துப்பொருள்கள், நாப்கின்கள் போன்றவை அனுப்பிவைக்கப்படுகின்றன. 

கேரளா முதல்வர் பினராயி விஜயன்

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதியிலிருந்து சுமார் 3.91 லட்சம் பேர் கேரளாவுக்காக நிதியுதவி அளித்துள்ளனர் என்றும் 14 நாள்களில் மட்டும் மொத்தமாக ரூ.713.92 கோடி நிவாரண நிதியாக வந்துள்ளது என்ற தகவல் கடந்த 28-ம் தேதி வெளியானது. தற்போது, மக்களிடமிருந்து வரும் நிவாரண நிதி மேலும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி வரையிலும் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு சுமார் ரூ.1,027.24 கோடி நிவாரண நிதியாக வந்துள்ளது. கேரளாவை மறுசீரமைப்பாதற்காக மக்களின் நிவாரண நிதியுதவிகள் இன்னும் அதிகரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.