வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (31/08/2018)

கடைசி தொடர்பு:14:10 (31/08/2018)

`என்னை ஆச்சர்யமாகப் பார்த்தனர்' - முதல் விமானியான காஷ்மீர் இஸ்லாமியப் பெண் நெகிழ்ச்சி!

எப்போதும் ஒருவித பதற்றமான சூழ்நிலையில் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தில், அமைதியாகத் தனது கனவை  நனவாக்கியுள்ளார், இஸ்லாமியப் பெண் ஒருவர். 

காஷ்மீர்  பெண் 'இராம் ஹபீப்

Photo Credit-twitter/@KhalidPDC

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் இராம் ஹபீப் (Iram Habib ). 30 வயதாகும் இவர், காஷ்மீர் இஸ்லாமியப் பெண்களுக்கு சிறந்த முன்னோடியாகத் திகழ்கிறார். ஊடகங்களின் கவனமும் கடந்த இரு தினங்களாக இவர்மீது திரும்பியுள்ளது. தனது கனவை  நனவாக்கிக் கொள்ள இவர் கடந்துவந்த பாதைகள் கடினம். அப்படி என்ன சாதனை படைத்திருக்கிறார்? காஷ்மீர் இஸ்லாமியப் பெண்களில் முதல் விமான ஓட்டுநர் பெண்ணாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். 

தனியார் ஏர்லைன்ஸ் ஒன்றில் அடுத்த மாதம் பணியில் சேர உள்ள இராம் ஹபீப், தனது வெற்றிகுறித்துக் கூறுகையில், ``வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றேன். அதன்பிறகு, ஒன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்தேன். ஆனால், ஆராய்ச்சிப் படிப்பின் இடையில், அமெரிக்க விமானப் பள்ளியில் சேர்ந்து படித்தேன். 2016-ல், விமானப் பயிற்சியை முடித்தபின் நாடு திரும்பினேன். அனைவரும், என்னை ஆச்சர்யமாகப் பார்த்தனர். அதுமட்டுமல்லாமல், பயிற்சியின்போது சக மாணவர்கள், காஷ்மீரில் இருந்து இஸ்லாமியப் பெண் ஒருவர் விமான ஓட்டுநராகப்போவதை ஆச்சர்யம்தான் எனக் கூறினர். ஆனால், தன்னிடம் எந்தப் பாகுபாடும் காண்பித்ததில்லை. டெல்லியில், தற்போது ஓட்டுநர் உரிமத்திற்காகப் பயிற்சி வகுப்பில் உள்ளேன். எனது கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக, தனியார் ஏர்லைன்ஸில் ஓட்டுநராகப் பணியாற்றப்போகிறேன். ஆனந்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும் தருணம். கனவு  நனவாகிவிட்டது'' என்றார். 

இராம் ஹபீப்பின் தந்தை, மருத்துவமனைகளுக்கு அறுவைசிகிச்சை உபகரணங்களை சப்ளை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.