வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (31/08/2018)

கடைசி தொடர்பு:14:25 (31/08/2018)

‘உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா?’ -  ப்ரியா வாரியருக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

ப்ரியா வாரியர்

கண் அசைவால் இளைஞர்களைக் கவர்ந்தவர், மலையாள நடிகை பிரியா வாரியார். ஒரு ‘அடார் லவ்’என்ற மலையாளப் படத்தில் வரும் ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடலில், தன் கண் அசைவால் காதலனைப் பார்க்கும் காட்சியில் நடித்திருப்பார். கண் அசைவால் இளைஞர்களைக் கட்டிப்போட்டார். இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது. ஒரு விஷயம் மிகப்பெரிய ஹிட் அடித்தால் அதற்கு எதிர்வினை இருக்கத்தானே செய்யும். இந்தப் பாடல், இஸ்லாமியர்களைப் புண்படுத்துவதாகவும், மத உணர்வை காயப்படுத்துவதாகவும் தெலங்கானா மாநிலத்தில் ப்ரியா வாரியருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 'இந்தப் பாடலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில்  ப்ரியா வாரியர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அவர்மீது எந்த வழக்கும் பதிவுசெய்யக் கூடாது மற்றும் விசாரணை நடத்தக் கூடாது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஒரு படத்தில் யாரோ பாட்டுப் பாடினால், உடனே வேலை இல்லாமல் வந்து வழக்குத் தொடர்வதா? மலையாளப் பாடலில் நடிகை ப்ரியா வாரியர் கண் சிமிட்டியதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி இனி தெலங்கானா,மகாராஷ்டிரா மாநிலங்களில் எங்கும் வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று கூறி, அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடிசெய்தனர்.