தலைநகரை ஆட்டுவித்த போலி மருத்துவர்கள்! - எய்ட்ஸ், புற்றுநோய் பெயரில் மோசடி | Delhi Police has arrested 3 persons for selling fake cancer and AIDS medicine

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (31/08/2018)

கடைசி தொடர்பு:17:15 (31/08/2018)

தலைநகரை ஆட்டுவித்த போலி மருத்துவர்கள்! - எய்ட்ஸ், புற்றுநோய் பெயரில் மோசடி

ய்ட்ஸ் மற்றும் புற்றுநோய்க்குத் தீர்வு காணக்கூடிய மருந்துகள் தங்களிடம் உள்ளதாகக் கூறி நோயாளிகளை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்களை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். 

கைதான போலி மருத்துவர்கள்

மருத்துவத்துறையில் பெரும் சவாலாக இருக்கிறது எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள். இவற்றைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள், இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. ஆனால், இவற்றைக் குணமாக்குகிறோம் எனக் கூறிக்கொண்டு வலம் வரும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மூன்று போலி மருத்துவர்களைக் கைது செய்துள்ளது டெல்லி போலீஸ். 

கைதானவர்கள் குறித்துப் பேசிய டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர், `எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி போலியான மருந்துகளை இந்தக் கும்பல் விற்பனை செய்து வந்துள்ளது. இவர்களிடமிருந்து பறிமுதல் செய்த மருந்துகள் அனைத்தும் கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளாகும். மருந்துகளை விற்பனை செய்தபோது, தங்களை மருத்துவர்கள் என இவர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். கூடவே, பிரபல மருத்துவமனைகளால் பணியமர்த்தப்பட்ட முகவர்கள் எனவும் கூறியுள்ளனர். 

எய்ட்ஸ், புற்றுநோய் போலி மருந்துகள்

சூரத், புனே, இந்தூர், வதோதரா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலும், இந்தக் கலப்பட மருந்துகளை நோயாளிகளிடம் விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக, மத வழிபாட்டுத்தளங்களுக்கு வரும் மக்களிடம் கனிவாகப் பேசி, அவர்களது குறைகளை முதலில் கேட்டறிந்து கொள்கின்றனர். அதன் பின்னர், ஏமாற்று வேலையில் தீவிர முனைப்பைக் காட்டுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த மூன்று நபர்களிடமிருந்து மருத்துச் சீட்டுகள், மருந்துப் பாட்டில்கள் மற்றும் மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என்றார்.