`திருநெல்வேலி சம்பவம்தான் நினைவுக்கு வந்தது’ - 69 பேரை காப்பாற்றிய கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் காளிராஜ் | Tamilnadu cop kaliraj recollects times of Thirunelveli floods

வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (31/08/2018)

கடைசி தொடர்பு:17:04 (31/08/2018)

`திருநெல்வேலி சம்பவம்தான் நினைவுக்கு வந்தது’ - 69 பேரை காப்பாற்றிய கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் காளிராஜ்

கேரளா வெள்ளத்தில் கோழிக்கோடு அருகே 69 பேரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரி காளிராஜ், தான் செயல்பட்ட விதம் குறித்து மீடியாக்களிடம் பேசியுள்ளார். 

போலீஸ் அதிகாரி காளிராஜ்

திருநெல்வேலியைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி காளிராஜ் மகேஷ்குமார் தற்போது கோழிக்கோடு மாநகரப் போலீஸ் கமிஷனர். கேரளா வெள்ளக்காடானபோது ஆகஸ்ட் 16-ம் தேதி கோழிக்கோடு அருகேயுள்ள காக்கையம் அணைக்கட்டு திறந்துவிடப்பட்டது. இதனால், பூனுர் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பூனுர் ஆற்றின் கரையில் கக்கோடி என்ற இடத்தில் வசித்த 69 பேர் இருப்பிடத்தைவிட்டு வெளியேற மறுத்தனர். போலீஸார் எவ்வளவோ கெஞ்சியும் பலன் இல்லை. தண்ணீரின் அளவு கூடிக்கொண்டே சென்றது. வசிப்பிடத்தை விட்டு மக்கள் வெளியேற மறுப்பது குறித்து கமிஷனர் காளிராஜ் மகேஷ் குமாருக்குத் தகவல் கிடைத்தது. இரவோடு இரவாக ஸ்ட்டிரைக்கிங் ஃபோர்ஸ் உடன் அந்த பகுதிக்குச் சென்ற காளிராஜ், அங்கிருந்த மக்களை தடாலடியாக அப்புறப்படுத்தினர். போலீஸாரிடமிருந்து தப்பி ஓடியவர்களையும் பிடித்து வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர். நடக்க முடியாதவர்களை அதிரடிப்படையினர் முதுகில் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். காலையில் கக்கோடி பகுதியை, இருந்த இடம் தெரியாமல் அழித்துப்போட்டிருந்தது பூனுர் நதி. போலீஸ் அதிகாரியின் அதிரடி  நடவடிக்கையால் 69 பேரும் உயிர் பிழைத்தனர். 

இந்தநிலையில் மீடியாக்களிடம் பேசிய ஐ.பி.எஸ் அதிகாரி காளிராஜ், 'அன்றைய இரவில் தான் தடாலடியாகச் செயல்பட்டிருக்கவில்லை என்றால் அத்தனை பேரும் உயிரிழந்திருப்பார்கள். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் போலீஸார், மீட்புப்படையினரின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும்'' என்று  கூறும் காளிராஜ் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். ''1992-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி திருநெல்வேலியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாபநாசம் அணை திறந்துவிடப்பட  தாமிரபரணி தண்ணீர் நகருக்குள் புகுந்தது. திருவள்ளுவர் நகரில் மீட்புப்படையினர் எவ்வளவே மன்றாடியும் 17 குடும்பங்கள் வெளியேற மறுத்துவிட்டன. முடிவில் அந்த 17 குடும்பத்தைச் சேர்ந்தவர்களும்  தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது நான் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வெள்ளம் வடிந்த பிறகு, நானும் என் நண்பரும் அவர்கள் வசித்த இடத்தை சென்று பார்த்தோம். அந்தக் காட்சி என் நினைவில் இப்போதும் நிற்கிறது. கக்கோடி பகுதியில் மக்கள் வெளியேற மறுக்கிறார்கள் என்கிற தகவல் கிடைத்ததும் முதலில் எனக்கு திருநெல்வேலி சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. அதனால்தான் இரவோடு இரவாக ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ் உடன் அங்கே சென்றேன்'' என்றார்.

காளிராஜ் மகேஷ்குமார் தமிழகத்திலும் ஏ.எஸ்.பி-யாகப் பணியாற்றியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து தீரத்துடன் போரிட்டவர். லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாதிகளுக்குச் சிம்மச் சொப்பனமாக திகழ்ந்த இவரைக் கொல்ல தீவிரவாதிகள் 5 முறை முயன்றனர். 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் சுட்டதில் காலில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். தொடர்ந்து தமிழகத்துக்கு காளிராஜை மத்திய அரசு மாற்றியது. இங்கு நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். தமிழகத்தில் பணியாற்றிய போதும் சிறந்த போலீஸ் அதிகாரி விருதை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பெற்றுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close