ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு அடுத்த நாளே நதியில் மிதந்த பழைய ரூபாய் நோட்டுகள்!

குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா நதியில் பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

ரூபாய்

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்கியது. இந்த நோட்டுகள் அனைத்தும் விரைவில் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பண மதிப்பிழப்பு நோட்டுகளில் 0.7 சதவிகிதம் மட்டுமே வெளியில் உள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு வெளியான மறுநாள் அதாவது நேற்று நர்மதா நதியில் சில பணமதிப்பிழப்பு நோட்டுகள் மிதந்தன. 

குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் நர்மதா நதியில் குளிப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். அப்போது அங்கு இரு 500 மட்டும் 1000 ரூபாய் நோட்டுகள் மிதந்ததைக் கண்டுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மேலும் சில நோட்டுகள் மிதந்துள்ளன. இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவ மக்கள் பலரும் நதிக்கு வந்து மேலும் பணம் உள்ளதா எனத் தேடத் தொடங்கினர். 

இந்தத் தகவல் உடனடியாக அப்பகுதி காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் கிராம மக்கள் பலரும் ரூபாய் நோட்டுகளைத் தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளனர். இறுதியாகப் போலீஸாருக்கு 36 நோட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. இது யாருடைய பணம், எப்படி இங்கு வந்தது, மொத்த பண மதிப்பு போன்றவை குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!