வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (31/08/2018)

கடைசி தொடர்பு:17:25 (31/08/2018)

`செப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாள்கள் வங்கி விடுமுறையா?’ நிதியமைச்சகம் விளக்கம்

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வங்கிகள் தொடர்ச்சியாக 6 நாள்கள் செயல்படாது என்ற வாட்ஸ்அப் தகவல் வதந்தியே என மத்திய நிதித்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

வங்கி

செப்டம்பர் மாதத்தில் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வங்கிகள் பல்வேறு காரணங்களுக்காகச் செயல்படாது என்ற ஒரு தகவல் கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நாள்களில் பெரும்பாலான வங்கிகளின் ஏ.டி.எம்-களிலும் பணம் இல்லாத நிலை ஏற்படும் என்ற ரீதியில் மக்களை அந்தச் செய்தி எச்சரிக்கிறது. இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவவே, அதில் உண்மையில்லை என மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

வங்கி விடுமுறை குறித்து விளக்கம்

இதுதொடர்பாக நிதியமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ``ஞாயிற்றுக்கிழமையான செப்டம்பர் 2-ம் தேதி மற்றும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான 8-ம் தேதி ஆகிய நாள்களில் மட்டுமே வங்கிகள் செயல்படாது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்தில் இந்த நாள்களைத் தவிர மற்ற நாள்களில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். செப்டம்பர் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட சில மாநிலங்களைத் தவிர, நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதேபோல், நாடு முழுவதும் வங்கி ஏ.டி.எம்-கள் வழக்கம்போல் செயல்படும். ஆன்லைன் வங்கிப் பணபரிவர்த்தனைகளை இது எந்தவிதத்திலும் பாதிக்காது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.