`கறுப்புப் பணமெல்லாம் வெள்ளையாகிவிட்டது’ - பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் ப.சிதம்பரம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணமெல்லாம் வெள்ளையாகிவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்திருக்கிறார். 

ப.சிதம்பரம்

கள்ள நோட்டுகளை ஒழிப்பது, கறுப்புப் பணப் புழக்கத்தைக் குறைப்பது மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளைத் தடுக்க, புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ல் மத்திய அரசு அறிவித்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டு, நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, `அரசின் இந்த நடவடிக்கையால் புழக்கத்தில் உள்ள 5 முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளிவரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  அதற்குப் பதிலாக, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதேநேரம், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  

இந்தநிலையில், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99.30 சதவிகித நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யபட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ரிசர்வ் வங்கி தரப்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், `கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, புழக்கத்தில் இருந்த ரூ.15.41 லட்சம் கோடி மதிப்புள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் ரூ.15.31 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இந்தத் தகவல், ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் கணக்கின்படி ரூ.10,270 கோடி மதிப்புள்ள பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் முழுவதும் வெள்ளையாகி இருப்பதாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ``அப்பாடா! 21 மாதங்கள் கழித்து ஒரு வழியாக ரிசர்வ் வங்கி செல்லாத ரூபாய் தாள்களை எண்ணி முடித்துவிட்டது. அவர்களைப் பாராட்டுவதா அல்லது நம் தலையில் அடித்துக்கொள்வதா?.கறுப்புப் பணமெல்லாம் வெள்ளையாகிவிட்டது!. 

பண முதலைகளின் கறுப்புப் பணத்தை எளிதாக மாற்றி வெள்ளைப் பணமாக்குவதற்கு மோடி அரசு கண்டுபிடித்த வழிதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை. பணமதிப்பு நீக்கம் என்பது ஒரு மோசடி நடவடிக்கை. அதற்கு இந்திய மக்கள் பட்ட துன்பமும் கொடுத்த விலையும் மிக அதிகம். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 15 கோடி அன்றாடம் வேலை செய்து பிழைப்போர் (அவர்களை நம்பி 45 கோடி மக்கள்) பல வாரங்கள் வருமானம் இழந்தனர், கடன் பட்டனர். பல லட்சம் சிறு, குறு தொழில்கள் (தமிழ்நாட்டில் மட்டும் 50,000) மூடப்பட்டன. ஒன்றரைக் கோடி பேர் (தமிழ்நாட்டில் மட்டும் 5,00,000) வேலையிழந்தனர். அரசு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, மக்கள் மீது துன்பத்தைச் சுமத்தக்கூடாது’’ என்று பதிவிட்டிருக்கிறார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!