`கடவுள் தேசம் விரைவில் அதன் பெருமைக்குத் திரும்பும்’ - கேரள மக்களை சந்தித்த நீட்டா அம்பானி

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீட்டா அம்பானி. 

நீடா அம்பானி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடுமையான சேதங்களை சந்தித்த கேரளாவுக்குத் தொடர்ந்து நிவாரண பொருள்களும் நிதியுதவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான நீட்டா அம்பானி கேரள முதல்வரை நேரில் சந்தித்து 21 கோடி ரூபாய் காசோசலையை வழங்கினார். மேலும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ.50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருள்களும் வழங்கியுள்ளார். 

நேற்று கேரளா வந்த நீட்டா அம்பானி முதல்வரிடம் காசோசலையை வழங்கிய பிறகு, வெள்ளத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பல்லிபட் கிராமத்துக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கேரள மக்களின் இந்தக் கடினமான சூழ்நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவும் என உறுதியளித்திருந்தது. நாங்கள் எப்போதும் உங்களுக்காக இருப்போம். நாம் அனைவரும் இணைந்து நம்பிக்கையுடன் இந்தத் துயரிலிருந்து வெளியே வருவோம். கடவுளின் தேசம் விரைவில் அதன் பெருமைக்குத் திரும்பும்” எனக் கூறினார். 

ரிலையன்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த 30 பேர் கடந்த 14-ம் தேதியிலிருந்து கேரளாவில் நிவாரண பொருள்களை வழங்கி வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து இலவச தொலைப்பேசி எண்களை வழங்கி அதன் மூலம் 1,600 பேரை மீட்டுள்ளனர். இதையடுத்து இந்த அறக்கட்டளை எர்ணாகுளம், ஆலப்புழா, திரிச்சூர், இடுக்கி, பதனம்திட்டா போன்ற மாவட்டங்களில் உள்ள 160 நிவாரண முகாம்களுக்குச் சென்று சுமார் 70,000 பேருக்கு நிவாரண பொருள்கள் வழங்கியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!