மோடியைக் கொல்ல சதி... உறுதியான ஆதாரம் இருப்பதாக மும்பை போலீஸ் அறிவிப்பு

பிரதமர் மோடியைக் கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ் புனே போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கை தொடர்பாக மும்பை மாநகர கூடுதல் டி.ஜி.பி பரம்பீர் சிங்  விளக்கம் அளித்துள்ளார். 

மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக பலர் கைது

'பீமா- கோரேகான் வன்முறைச் சம்பவம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ரோனா வில்சனிடம் இருந்து 1,000 ஆவணங்கள் கைப்பற்றியுள்ளோம். பென்டிரைவ்களும் கைப்பற்றப்பட்டன. வில்சனிடம் இருந்து கிடைத்த கடிதத்தில், `` மோடி ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி 15 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடி ராஜ்யத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை தேவை. அது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பாணியில் கூட இருக்கலாம்'' என்று சொல்லப்பட்டுள்ளது. 

மாவோயிஸ்ட் தலைவர் பிரகாஷ் என்பவருக்கு சுதா பரத்வாஜ் எழுதிய கடிதமும் எங்களுக்கு கிடைத்தது. அதில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வலதுசாரி அமைப்புத் தலைவர்கள் மீது அவதூறு கிளப்பலாம். இதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தேவையான நிதியுதவியைச் செய்யவும் '' என்று கேட்டுள்ளார். மாவோயிஸ்ட்டுகள் நாடு முழுக்கவுள்ள சமூகப் போராளிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களைப் பயன்படுத்தி அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த முனைகின்றனர். பீமா - கோரேகான் சம்பவம் நிகழக் காரணமாக இருந்த `கபிர் கலா ' என்ற அமைப்புடன் தொடர்புள்ள அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர்'' என்று தெரிவித்துள்ளார். 

எழுத்தாளர் வரவர ராவ் உள்ளிட்ட 5 பேரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தப்பார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையில் அரசு வழக்கறிஞர் உஜ்ஜாலா பவார், ``பாசிசத்துக்கு எதிரான அகில இந்திய முன்னணி ' என்ற தலைப்பிடப்பட்ட ஆவணத்தை நீதிபதிகளிடம் அளித்தார். ``இந்து பாசிஸ அமைப்புகளுக்கு எதிரான மாவோயிஸ்ட்களுடன் முஸ்லிம், பட்டியல் இன மக்கள் கைகோக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருப்பதாகவும் உஜ்ஜாலா பவார் நீதிபதிகளிடம் சொன்னார். மேலும், கைது செய்யப்பட்ட வரவர ராவ், கௌதம் நவால்கா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சால்வ்ஸ் ஆகியோர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்'' என்றும் கூறினார். 

புதிதாக உருவான இந்து பாசிச எதிர்ப்பு முன்னணி தென்தமிழகம், குஜராத், இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகராஸ்டிரா மாநிலங்களில் இளைஞர்களைத் தேர்வு செய்து தீவிரவாத செயல்களுக்குப் பயிற்சி அளித்து வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!