சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பலவீனமான நிலை 31.08.2018 | Share market for the day at close 31-08-2018

வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (31/08/2018)

கடைசி தொடர்பு:19:23 (31/08/2018)

சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பலவீனமான நிலை 31.08.2018

ஒரு பலவீனமான தொடக்கத்துக்குப் பின் சற்று சுதாரித்து மிகக் குறுகிய நேரம் மட்டுமே பாசிட்டிவ் திசையில் பயணித்த இந்தியப் பங்குச் சந்தை, இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒரு தளர்ச்சியுற்ற நிலையில் முடிவுற்றது.

வர்த்தகப் பூசல் பற்றிய கவலை, ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் தொய்வு நிலை, ரூபாயின் சரிவு மற்றும் முதல் காலாண்டு ஜிடிபி புள்ளிவிவர அறிவிப்புக்கு முன் பங்குகளை வாங்க தயக்கம் ஆகியவை காரணமாக சந்தை களையிழந்து காணப்பட்டது.

மும்பை சந்தையின் சென்செக்ஸ் 45.03 புள்ளிகள் அதாவது 0.12 சதவிகித நஷ்டத்துடன் 38,645.07 என முடிவுற்றது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 3.70 புள்ளிகள் அதாவது 0.03 சதவிகித லாபத்துடன் 11,680.50-ல் முடிந்தது.
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் மீது 25 சதவிகித வரி சுமத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக இருப்பதும், அடுத்த வாரத்திலிருந்து இவ்வரி விதிப்பு அமலுக்கு வரக்கூடும் என்ற அச்சமும் ஆசிய சந்தைகளின் வீக்னஸுக்கு காரணமாக அமைந்தது. 

இதே காரணத்துக்காகவும் மற்றும் பிரெக்ஸிட் பற்றிய நிச்சயமற்ற நிலை காரணமாகவும் ஐரோப்பிய சந்தைகள் சற்று இறங்குமுகமாக இருந்தன.

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவு டாலருக்கு 71 என்று சரிந்தது இந்தியச் சந்தைகளில் முதலீட்டாளர்களின் மனநிலையை வெகுவாக பாதித்தது.

மேலும், சந்தை முடிந்தபின் வெளிவர இருக்கும் இந்தியாவின் நடப்பாண்டில் முதல் காலாண்டுக்கான GDP அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு காரணமாகவும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ பெரிதாக எந்த முடிவும் எடுக்க தயாராகயில்லை என்பதும் சந்தையின் சரிவுக்கு ஒரு காரணம்.


சந்தையில் இன்று விலை அதிகரித்த பங்குகள் :

டெக் மஹிந்திரா 4.8%
டாக்டர் ரெட்டி'ஸ் 4.7%
லூப்பின் 4.4%
எச்.சி.எல். டெக்னாலாஜிஸ் 2.9%
டாடா மோட்டார்ஸ் 2.9%
யு.பி.எல். 2.85%
பவர் கிரிட் 2.4%
சன் பார்மா 2%
சிப்லா  1.75%
பஜாஜ் ஆட்டோ 1.65%
இன்போசிஸ் 1.6%
வெல்ஸ்பன் இந்தியா 8.9%
ஹாட்ஸன் அக்ரோ 8.6%
எச்.டி.ஐ.எல் 8%

விலை சரிந்த பங்குகள் :

வக்ராஞ்சி 8.2%
யெஸ் பேங்க் 5.1%
ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் 3.5%
சம்பல் பெர்டிலைசர்ஸ் 3.3%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.6%
பஜாஜ் பைனான்ஸ் 2.4%
மஹிந்திரா & மஹிந்திரா 1.7%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1440 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1236 பங்குகள் விலை சரிந்தும், 184 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.