வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (31/08/2018)

கடைசி தொடர்பு:20:48 (31/08/2018)

'நீ இந்து பெண்தானே, நெற்றியில் ஏன் பொட்டு இல்லை?' - வரவர ராவ் மகளிடம் சீறிய போலீஸார்

கைது செய்யப்பட்ட எழுத்தாளர் வரவர ராவின் மகளிடம் போலீஸார் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'நீ இந்து பெண்தானே, நெற்றியில் ஏன் பொட்டு இல்லை?' - வரவர ராவ் மகளிடம் சீறிய போலீஸார்

பிரதமர் மோடியைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக, ஹைதராபாத்தில் இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், 4 மனித உரிமைப் போராளிகள் கைது நடவடிக்கைக்குள்ளாகியுள்ளனர். வரவர ராவின் மகள் பெயர் பாவனா. இவர், பட்டியல் இனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சத்யநாராயணாவைத் திருமணம் செய்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் சத்யநாராயணா பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் ஹைதராபாத் வந்த புனே போலீஸார், வரவர ராவ் வீடு, மருமகன் சத்யநாராயணா வீடு உள்ளிட்டவற்றைச் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த வரவர ராவின் மகள் பாவனாவிடம் `உங்கள் கணவர், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் உயர் சாதி இந்து பெண்தானே... உங்கள் முகத்தில் ஏன் பொட்டு இல்லை? தந்தைபோலத்தான் நீங்களும் இருப்பீர்களா?' என்று கேலிசெய்யும் விதத்தில் கேட்டுள்ளனர். 

தன் வீட்டில் நடந்த சோதனையின்போது நடந்தவற்றைப் பற்றிக் கூறினார் சத்யநாராயணா. ``சோதனை நடந்த அன்றைய தினம் காலை 8:30 மணிக்கு, புனே மற்றும் தெலங்கானா போலீஸ் எங்கள் வீட்டை முற்றுகையிட்டனர். இங்கே என் மாமாவை (வரவர ராவ்) தேடி வந்தாகச் சொன்னார்கள். `வரவர ராவ் இங்கே எதுவும் ஒளித்து வைத்துள்ளாரா?' எனக் கேட்டனர். பிறகு, என்னிடம் இங்கே ஏன் இவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன? இங்கே உள்ள அனைத்து புத்தகங்களையும் நீங்கள் படிப்பீர்களா? மாவோ, மார்க்சியச் சிந்தனைகொண்ட புத்தகங்களை ஏன் படிக்கிறீர்கள்? சீனா சென்று ஏன் புத்தகம் வெளியிட்டீர்கள்?' என்றெல்லாம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினர்.

வரவரராவ் கைது

Images Courtesy: Chaithu

இன்னோர் அதிகாரி, `தேவையில்லாத புத்தகங்களைப் படித்து மாணவர்களைச் சீரழிக்கிறீர்கள்' என்று சீறினார். பெருமைமிக்கப் பல்கலையில் நான் பணிபுரிகிறேன். போலீஸாரின் நடத்தை, எனக்கு கடும் வேதனையைத் தந்தது. கம்ப்யூட்டர், ஹார்ட்டிஸ்க், லேப்டாப், புத்தகங்கள் என அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டனர். நான் வெளியிடவுள்ள இரு புத்தகங்களின் சாஃப்ட் காப்பி கம்ப்யூட்டரில் பதிவேற்றி வைத்திருந்தேன். எல்லாவற்றையும் எடுத்துச் சென்றதால்,  என் 20 வருட உழைப்பு வீணாகப்போய்விட்டது.  

`உன் மாமனாருக்கு அறிவுரை கூறுவதில்லையா? மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் ஏன் கொண்டிருக்கிறார்? வயதான காலத்தில் வீட்டில் ஓய்வாக மகிழ்ச்சியாக இருப்பதை விட்டுவிட்டு, ஏன் இப்படிச் செய்கிறார்?' என்று என்னிடம் கேட்டார்கள். என் இ-மெயில் ஐ.டி-யின் பாஸ்வேர்டும் கேட்டார்கள். அதைத் தரவில்லையென்றால், `சோதனை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை' என்று கூறி கைதுசெய்துவிடுவதாக மிரட்டினார்கள்'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.

வரவர ராவின் மகள், மருமகன் ஆகியோர் கூறிய இந்தக் குற்றச்சாட்டுகளை, புனே நகர இணை காவல் ஆணையர் சிவாஜி போக்டே மறுத்துள்ளார். ``சட்டத்துக்குட்பட்டே சோதனை நடத்தப்பட்டது. ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை வரவர ராவ் குடும்பத்தினர் சுமத்துகின்றனர். அநாகரிகமான எந்தக் கேள்வியும் அவர்களிடம் கேட்கப்படவில்லை'' என்று அவர் கூறியுள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் பீமா-கோரேகாவ் கலவரம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட மனித உரிமைப் போராளி ரோனா ஜேக்கப் வில்சனை, புனே நகர போலீஸார் கைதுசெய்தனர். வில்சனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், பிரதமர் மோடியைக் கைதுசெய்ய மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டு, அதற்காக நிதி திரட்டித் தரும்படி வரவர ராவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரவர ராவ் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

வரவரராவ் கைது

Images Courtesy: Chaithu

வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாபர், கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 6-ம் தேதி மீண்டும் வழக்கை விசாரிப்பதாகவும், அதுவரை வரவர ராவ் உள்ளிட்ட ஐந்து பேரை வீட்டுக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டது. செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டு  புனே கொண்டு செல்லப்பட்ட வரவர ராவ், வியாழக்கிழமை மீண்டும் ஹைதராபாத் கொண்டுவரப்பட்டார். வீட்டுக்குள் நுழைவதற்கு முன் செய்தியாளர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிய வரவர ராவ், ``இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையுள்ளது. அரசின் செயல்பாடு திட்டமிடப்பட்டது. இந்தச் சமூகத்தைப் பாதிக்கக்கூடிய செயல். எங்களை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டு, அரசின் முகத்தில் உச்ச நீதிமன்றம் அறைந்துள்ளது'' என்று தெரிவித்தார். 

ஜவஹர் நகரில் உள்ள வரவர ராவ் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வீட்டுக்கு வெளியே, போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். வரவர ராவின் மகள்கள், மருமகன்கள் தவிர வேறு யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. வரவர ராவிடம் செல்போனில் பேச மீடியாக்கள் முயன்றபோது, அவரின் மனைவி ஹேமலதா மீடியாக்களிடம் பேச அவருக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகப் பதிலளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்