`வெளிநாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.34க்கு விற்கும் இந்தியா!’ - ஆர்.டி.ஐ தகவலை முன்னிறுத்தி காங்கிரஸ் குற்றச்சாட்டு | India sold petrol, diesel to foreign countries with half price of inside India selling price

வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (31/08/2018)

கடைசி தொடர்பு:20:38 (31/08/2018)

`வெளிநாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.34க்கு விற்கும் இந்தியா!’ - ஆர்.டி.ஐ தகவலை முன்னிறுத்தி காங்கிரஸ் குற்றச்சாட்டு

உள்நாட்டில் பெட்ரோலை 81 ரூபாய்க்கும் டீசலை 74 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் மத்திய பா.ஜ.க அரசு வெளிநாடுகளுக்கு பெட்ரோல் 34 ரூபாய்க்கும் டீசலை 36 ரூபாய்க்கும் விற்பனை செய்து இந்தியர்களின் முதுகில் குத்துகிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரேஜ்வாலா விமர்சித்திருக்கிறார். 

பெட்ரோல் டீசல் விலை

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வதும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் என்பவர் வெளிநாடுகளுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யப்படும் விலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதில், '2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதிவரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஹாங்காங், மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 32 - 34 வரையிலும், ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 34 - 36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டது' தெரியவந்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரேஜ்வாலா, 'அதிகமான வரிகள் மூலம் 11 லட்சம் கோடி ரூபாய்வரை அரசு கொள்ளையடித்துள்ளது. இந்தியர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான விலையில் பெட்ரோல், டீசல் வாங்கிவரும் நிலையில், மோடி அரசு வெளிநாடுகளுக்கு குறைவான விலையில் பெட்ரோல் டீசலை விற்பனை செய்கிறது. 2014-ம் ஆண்டு  டீசல் மீதான சுங்கவரி 3.46 ரூபாய் இருந்தது. தற்போது அது 15.33 ரூபாயாக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 12 முறை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் எரிபொருள் கொள்ளையை பொதுமக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். வரக்கூடிய தேர்தலில் அதற்கான பதிலடி கொடுப்பார்கள். இந்தியாவில் பெட்ரோல் 78 ரூபாய் முதல் 86 ரூபாய்க்கும் டீசல் 70 ரூபாய் முதல் 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேநேரத்தில் 15 நாடுகளுக்கு பெட்ரோலை லிட்டருக்கு 34 ரூபாய்க்கும், 37 நாடுகளுக்கு டீசலை 37 ரூபாய்க்கும் இந்தியா விற்பனை செய்கிறது' என்று குற்றம்சாட்டினார்.