வெளியிடப்பட்ட நேரம்: 09:27 (01/09/2018)

கடைசி தொடர்பு:09:27 (01/09/2018)

கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்ணை ஃபேஸ்புக் மூலம் கண்டுபிடித்துக் கைதுசெய்த காவல்துறை!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பது ஃபேஸ்புக் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஃபேஸ்புக்

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைஸாபாத் பகுதியைச் சேர்ந்தவர், ரூபி. கடந்த 2016 -ம் ஆண்டு, இவருக்கும் ராகுல் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.  கடந்த ஜூன் மாதம், ரூபியின் தந்தை தனது மகளை வரதட்சணைக் கொடுமையால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக, ராகுல் மற்றும் அவரது  பெற்றோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், காவல் துறையினர் அந்தப்  புகாரை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். ரூபி கொலைசெய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பெண்ணின் ஃபேஸ்புக் பக்கம் தொடர்ந்து இயக்கத்தில் இருந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்மூலம், அவரது செல்போன் இயக்கத்தைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாகக்  கண்காணித்துவந்த காவல் துறையினர், அவர் டெல்லியில் இருப்பதைக்  கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரூபியைத் தேடி உத்தரப்பிரதேச போலீஸார் டெல்லி சென்றனர். அங்கு, அவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், ராமு என்பவரைத் திருமணம்  செய்துகொள்ள,  கொல்லப்பட்டதுபோல அவர் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இது தொடர்பாகக் காவல்துறை அதிகாரி ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “அப்பெண்ணின் தந்தை புகார் அளித்தபோது , அவர் கொல்லப்பட்டதுக்கு போதிய ஆதாரங்கள்  இல்லை. அவரது உடலையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாகத்தான் வழக்குப்  பதியவில்லை. அதன் பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி  விசாரணை மேற்கொண்டபோது, அவரின் ஃபேஸ்புக்  பக்கம்மூலம் அவரைக்  கண்டுபிடித்தோம். ராமு என்பவரைத்  திருமணம் செய்ய, கணவர்மீது பழி வரும்படி நாடகமாடியது தெரியவந்தது. தற்போது, இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தைத்  தவறான பாதையில் திசைதிருப்பியதற்காக  ரூபியின் தந்தை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.