`ஆண்களின் திருமண வயதைக் குறைக்க வேண்டும்' -18 ஆக நிர்ணயிக்க சட்ட கமிஷன் பரிந்துரை! | Law Commission of India has suggested making 18 is the legal age for marriage for men

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (01/09/2018)

கடைசி தொடர்பு:10:00 (01/09/2018)

`ஆண்களின் திருமண வயதைக் குறைக்க வேண்டும்' -18 ஆக நிர்ணயிக்க சட்ட கமிஷன் பரிந்துரை!

'ஆண்களின் திருமண வயதில் மாற்றம் கொண்டுவர வேண்டும்' என மத்திய அரசிடம் பரிந்துரைசெய்துள்ளது சட்ட கமிஷன். 

ஆண்களின் திருமண வயதை குறைக்க வேண்டும்

நாட்டில், பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது. இந்த முறையில் மாற்றம் கொண்டு வர சட்ட கமிஷன், மத்திய அரசிடம் பரிந்துரைசெய்துள்ளது. அதாவது, ஆண்களின் திருமண வயதை 21-ல் இருந்து 18 ஆக க்குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியுள்ளது. 

குடும்ப சிவில் சட்டங்களில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் அனுப்பிய ஆலோசனைப் பரிந்துரையில், ` 18 வயது என்பது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வயதாகும். 18 வயது நிரம்பிய குடிமக்கள் தங்களது அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் மாபெரும் பொறுப்பில் இருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களுக்குத் தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் உள்ளது. அதனால், பெரியவர் சிறியவர் என ஆண்-பெண் திருமண வயதில் எந்த ஒரு வேறுபாடும் இருக்கவேண்டிய அவசியமில்லை. மேலும், திருமண வயதை நிர்ணயிப்பதில் பாலின அடிப்படையிலான முரண்பாடு உள்ளது. கணவரைவிட மனைவியின் வயது குறைந்ததாகவே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை மாற்றவும் இந்தச் சட்ட திருத்தம் உதவும். வித்தியாசங்கள் அகற்றப்பட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்து திருமணச் சட்டம் மற்றும் இஸ்லாமிய சட்டம் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.