நடிகர் ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்ஃபி எடுத்த 4 நர்ஸ்கள் பணி நீக்கம்!

தெலுங்கு நடிகரும் என்.டி.ஆர் மகனுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா, சாலை விபத்தில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தார். காருக்குள் படுகாயமடைந்தநிலையில் கிடந்த ஹரிகிருஷ்ணாவை நலகொண்டா மாவட்டம், நார்கெட்பள்ளியில் உள்ள காமினேனி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். சிகிச்சை பலனளிக்காமல் ஹரிகிருஷ்ணா மருத்துவமனையில் உயிரிழந்தார். உடல் கூறு ஆய்வுக்காக ஹரிகிருஷ்ணா உடல் வைக்கப்பட்டிருந்தபோது, மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு ஆண் செவிலியர் உள்பட 4 பேர், சிரித்தபடி அவரின் உடலுடன் செல்ஃபி எடுத்தனர். இந்த செல்ஃபி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சமூக வலைதளங்களில் பரவியது.  'விபத்தில் மரணமடைந்த ஒருவரின் உடலுடன், அதுவும் சிரித்தபடி செல்ஃபி எடுப்பது மனிதத்தன்மையற்ற செயல்' எனக் கடும் கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அந்த 4 பேரையும் பணியிலிருந்து நீக்கியுள்ளது.  

நந்தமுரி ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்ஃபி

இந்தச் சம்பவத்துக்காக மருத்துவமனை நிர்வாகம், ஹரிகிருஷ்ணா குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் வெங்கட் பரத்வாஜ் கூறுகையில், ''நந்தமுரி ஹரிகிருஷ்ணா சடலத்துடன் செல்ஃபி எடுத்த விவகாரம் வெள்ளிக்கிழமை எங்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக 4 நர்ஸ்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட அவர்களுக்காக, நாங்கள் ஹரிகிருஷ்ணா குடும்பத்தினரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெறுபவர்களை குடும்பத்தில் ஒருவராகவே பாவிக்கிறோம். நோயாளிகளின்  தனிநபர் சார்ந்த  உரிமைகளுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனினும், இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமாக நடந்துவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம்''  என்றார். 

ஹரிகிருஷ்ணா, புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் என்பதால், அவரின் சடலத்துடன் ஆர்வக்கோளாறு காரணமாக அந்த 4 பேரும் செல்ஃபி எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!