வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (01/09/2018)

கடைசி தொடர்பு:17:00 (01/09/2018)

`சென்ற இடமெல்லாம் நிராகரிக்கப்பட்டேன்!' - முதல் ஓலா ஓட்டுநர் திருநங்கை வேதனை

``தன்னுடன் காரில் பயணிக்கும் பெண் பயணிகள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள்'' என்று மகிழ்ச்சியாகக் கூறுகிறார் திருநங்கையான மேகனா சஹூ. 

திருநங்கை மேகனா சஹூ

Photo Credit -twitter/@LGBT_Activism

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் மேகனா சஹூ ( 30). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் ஒரு திருநங்கை. சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மிகக்கடினமானது. கேலி, கிண்டல்கள் என அனைத்தையும் சகித்து, முதல் ஓலா கேப் ஓட்டுநர் என சமூகத்தில் அழுத்தமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

`திருநங்கை என்ற காரணத்துக்காக பல இடங்களில் நிராகரிக்கப்பட்டேன்' எனக் கூறும் மேகனா சஹூ, தனது வாழ்க்கைப் பாதை குறித்து விவரிக்கிறார். `சமூகத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் துயரங்கள் எண்ணில் அடங்காதவை. ஆரம்ப காலகட்டத்தில் முறையான ஒரு வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ள கஷ்டப்பட்டேன். மிகுந்த சிரமத்துடன் எம்.பி.ஏ படித்து முடித்தேன். அதன்பிறகு வேலைக்காகப் பல இடங்களில் விண்ணப்பித்து தோற்றுப் போனேன். சென்ற இடமெல்லாம் நிராகரிப்பு மட்டுமே மிஞ்சியது. இதனிடையில், உச்ச நீதிமன்றம் `நாட்டின் மூன்றாம் பாலினத்தவர் திருநங்கைகள்' என அங்கீகாரம் அளித்தது. அதன் பிறகே, ஓட்டுநர் ஆகலாம் என முடிவு செய்தேன். மூன்றாம் பாலினத்தவர் என்ற அடையாளத்துடன் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தேன். கார் ஓட்ட முறையாகக் கற்றுக்கொண்ட எனக்கு அவ்வளவு எளிதில் ஓட்டுநர் உரிமமும் கிடைக்கவில்லை. அதற்கும், போராட்டம்தான். 

மேகனா சஹூ

ஒரு வழியாக ஓட்டுநர் உரிமம் கிடைத்தவுடன் ஓலா நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஓலா கேப் ஓட்டுநர்களில் முதல் திருநங்கை என்ற பெருமையை தட்டிச் சென்றேன். என்னுடன் கேபில் பயணிக்கும் பெண் பயணிகள் மிகவும் பாதுகாப்பாக உணர்வார்கள். அதே நேரத்தில், ஆண் பயணிகள் என்னைச் சீண்டியதில்லை. மாறாக, ஊக்குவித்து மகிழ்ந்தார்கள்' என்று உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.