`வங்கி சேவை எல்லா தரப்பு மக்களையும் சென்றடையும்!’ - அஞ்சலக வங்கி சேவை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் அஞ்சலகங்களில் வங்கி சேவைகள் திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். 

பிரதமர் மோடி

கிராம மக்களுக்கு எளிதாக வங்கி சேவைகளை வழங்கும் நோக்கில் ‘இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க்’ (IPPB) என்ற புதிய திட்டத்தை இன்று டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சேமிக்க நினைப்பவர்கள் தங்கள் அருகில் உள்ள தபால்காரருக்குத் தகவல் தெரிவித்தால் அவர் வீட்டுக்கே வந்து புதிய கணக்கைத் தொடங்க உதவி செய்வார். பிறகு, கணக்கின் எண் போன்ற மற்ற விவரங்கள் உங்கள் தொலைப்பேசிக்கு மெசேஜ் செய்யப்படும். அஞ்சலக வங்கி சேவை தொடங்க எந்த அடிப்படை விவரங்களும் தேவையில்லை. ஆதார் மற்றும் தொலைபேசி எண் இருந்தால் மட்டுமே போதுமானது. ஐ.பி.பி.பி மூலம் வாடிக்கையாளர்கள் தொடங்கும் சேமிப்பு கணக்குக்கு பாஸ் புத்தகம், ஏ.டி.எம் கார்டு, செக்புக் போன்ற எதுவும் வழங்கப்படமாட்டாது. அதற்குப் பதிலாக கியூ.ஆர் கார்டு மட்டுமே வழங்கப்படும். அதன் மூலம் வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்துகொள்ள முடியும். மேலும், கணக்கில் இருந்து பணம் எடுக்க நினைப்பவர்கள் தொலைபேசி அல்லது இணையம் மூலம் தகவல் தெரிவித்தால் தபால்காரர் வீட்டுக்கே வந்து பணத்தைத் தருவார்.

பிரதமர் மோடி 

இந்தியா முழுவதும் 650 கிளைகள் மற்றும் 3,250 சேவை மையங்களைப் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்துடன் இந்தியாவில் உள்ள 1.55 லட்சம் அஞ்சலகங்களும் இணைப்பில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11,000 தபால்காரர்கள் முதல்கட்டமாக இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்குச் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் தபால்காரரிடமிருந்து பெற முடியும். அதேபோல ஒரு நாளுக்கு 2 முறை டெபாசிட் செய்யவும் இரண்டு முறை பணம் எடுக்கவும் முடியும். 

டெல்லியில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பேசிய பிரதமர் மோடி, ``அஞ்சல் வங்கி சேவை மூலம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வங்கி மற்றும் வங்கி சேவை சென்றடையும். நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வீட்டு வாசலுக்கு வங்கி சேவை இதன்மூலம் சென்று சேரும்’’ என்று பேசினார். 

சென்னையில் நடைபெற்ற தொடக்க விழா

தமிழகத்தில் 185 தபால் நிலையங்களில் இந்த வங்கி சேவைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், கன்னியாகுமரியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் இந்த திட்டத்தைத் தொடங்கிவைத்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!