வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/09/2018)

கடைசி தொடர்பு:18:00 (02/09/2018)

`ஒழுக்கமாக இருங்கள் என்று சொல்பவரை எதேச்சதிகாரவாதி என்கிறார்கள்!’ - பிரதமர் மோடி பேச்சு

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். 

புத்தக வெளியீட்டு விழா

பா.ஜ.க மூத்த தலைவரான வெங்கையா நாயுடு, துணைக் குடியரசுத் தலைவராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்தயொட்டி, கடந்து வந்த பயணங்கள் மற்றும் அனுபவங்களைத் தொகுத்து `Moving on Moving Forward: A Year in Office' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. 

பிரதமர் மோடி

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் தேவகவுடா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

விழாவில் பேசிய மோடி, `பல வருடங்களாக வெங்கையா நாயுடுவுடன் இனைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர் அரசியலில் 10 ஆண்டுகள், மாநில மற்றும் தேசிய அரசியலில் 40 ஆண்டுகள் என மொத்தம் 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட தலைவர் அவர். பொறுப்பு கிடைத்தால் போதும் தொலைநோக்குத் தலைமையுடன் சிறப்பாகப் பணியை நடத்தி முடிப்பார். வெங்கையா, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சரளமாக விளையாடுபவர். விவசாயிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். இன்றைய சூழலில் ஒழுக்கமாக இருங்கள் என்று யாராவது சொன்னால், அவரை எதேச்சதிகாரவாதி என்று பட்டம் சூட்டி விடுகின்றனர். தனது பொதுவாழ்வில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவர் வெங்கையா நாயுடு' என்று பேசினார்.