வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (02/09/2018)

கடைசி தொடர்பு:20:30 (02/09/2018)

ஒரு வினாத்தாள் ரூ. 7 லட்சம் -உ.பியில் ரத்து செய்யப்பட்ட சார்புநிலை சேவை தேர்வு!

உத்தரபிரதேசத்தில் சார்புநிலை சேவை தேர்வு ஆணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கான வினாத்தாள் ரூ. 7 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் வெளியீடு

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த சார்புநிலை சேவைத் தேர்வு (UP Subordinate Service Selection Commission) திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்கும் போது 7 லட்சம் ரூபாய்க்கு வினாத்தாள் விற்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

இந்த வினாத்தாள் மோசடிக்கு மூளையாக இருந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர் உள்பட 11 பேரை அம்மாநில சிறப்பு படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தமாக 364 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அடுத்த தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து பேசிய காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் அபிஷேக் சிங், “ வினாத்தாள் வாங்கியவர்கள் மற்றும் அதை வெளியிட்டவர்களைக் கைது செய்துள்ளோம். ஆரம்ப பள்ளி ஆசிரியர் சச்சின் சௌத்ரி தான் இதற்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார். ஒவ்வொரு வினாத்தாளும் ரூ. 7 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது அதுவும் தேர்வு தொடங்குவதற்கு 15 நேரம் முன்பாக விற்கப்பட்டுள்ளது. தேர்வு தாள் வெளியான பிறகு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சௌத்ரியிடம் தீவிர விசாரணை நடைபெற்று கொண்டிருகிறது” எனக் கூறினார். 

3,210 சார்புநிலை சேவைக்கான காலி இடங்களுக்கு இரண்டு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு தேர்வர்கள் பலர் தேர்வு மையங்களுக்கு முன் போராட்டம் நடத்தியுள்ளனர்.