``அமைதிப் பேரணியில் ஆரவாரம் வேண்டாம்” - அறிக்கை மூலம் அழகிரி வேண்டுகோள்

அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள வரும் உடன்பிறப்புகள் எவ்வித ஆரவார, ஆர்ப்பாட்டத்துக்கும் இடம் கொடுக்காமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அழகிரி அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அழகிரி

கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கட்சியில் சேர்க்காமல் புறக்கணிக்கப்பட்டு வரும் தன் பலத்தைக் காட்டும் வகையிலும் சென்னையில் வரும் 5-ம் தேதி பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டு வருகிறார் அழகிரி. இது தொடர்பாக தொடர்ந்து அவர் ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நான் தலைவரின் பிள்ளை. சொன்னதைச் செய்வேன். சென்னை அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் மேல் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``தலைவர் கருணாநிதியின் 30-ம் நாள் நினைவு நாளை முன்னிட்டு எனது தலைமையில் மாபெரும் அமைதிப் பேரணி வரும் 5-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணசிலை அருகே உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளோம். 

அழகிரி

இதில் பங்கேற்கவுள்ள உடன்பிறப்புகள் காலை 10 மணிக்கு அண்ணாசிலை அருகே திரண்டிட வேண்டுகிறேன்.  அமைதிப் பேரணியில் எவ்வித ஆரவார, ஆர்ப்பாட்டத்துக்கும் இடம் கொடுக்காமல் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறு தராமலும், நடந்துகொள்ள வேண்டும். சென்னை நகருக்குக் காலை 8 மணிக்குள் வந்து சேரும் வகையில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பேரணியில் கலந்துகொள்ள வரும் போதும், திரும்பிச் செல்லும் போதும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் பயணம் மேற்கொள்ளப் பாசத்துடன் வேண்டுகிறேன்”  எனத் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!