வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (03/09/2018)

கடைசி தொடர்பு:09:28 (03/09/2018)

ஆர்ப்பரிக்கும் அருவி - உத்தரகாண்டில் தொடரும் கன மழை

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கன மழையினால் அங்குள்ள கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கனமழை

வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாகக் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் அடை மழையினால் முச்சோரியில் உள்ள சுற்றுலாத்தலமான கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த வியப்பூட்டும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தொடர் மழையினால் உத்தரகாண்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

40 அடி உயரமுள்ள இந்த கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் எதிர்பாராத அதிக நீர்வரத்தினால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வீழ்ச்சியின் அருகில் வசித்து வரும் மக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். 

உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் கன மழைக்கு உத்தரகாண்டில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் உள்ள ஷாஜஹான்பூர் என்ற மாவட்டம் அதிக சேதத்தை சந்தித்துள்ளது.