வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (03/09/2018)

கடைசி தொடர்பு:09:10 (03/09/2018)

‘எலிக் காய்ச்சலால் ஒரே நாளில் 10 பேர் பலி!’- கேரளா முழுவதும் அதிதீவிர கண்காணிப்பு

கேரள மாநிலத்தில் பரவி வரும் எலிக் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 10 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கேரளத்தின் அனைத்து மாவட்டங்களும் அதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக அனைத்து மாவட்டங்களும் தண்ணீரில் மூழ்கின. இப்போது தண்ணீர் வடிந்து மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், எலிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் முதலில் தொடங்கிய எலிக் காய்ச்சல் திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கண்ணூர் மாவட்டங்களில் பரவியது. இந்த நிலையில், எலி காய்ச்சல் காரணமாக நேற்று ஒருநாள் மட்டும் 10 பேர் இறந்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் 3 பேர், மலப்புறம் 2, திருச்சூர் 1, பாலக்காடு 2, எர்ணாகுளம் 2 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கிய எலிக்காய்ச்சலில் இதுவரை 45 பேர் இறந்துள்ளனர். ஏற்கெனவே கோழிக்கோடு, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர், மலப்புறம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் அதிதீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தன. இப்போது கேரளத்தின் 14 மாவட்டங்களையும் அதி தீவிரமாக கண்காணித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.