முடி உதிர்ந்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு! அழகு நிலையம் மீது தந்தை புகார் | Bengaluru girl kills her self depressed by hairfall

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (03/09/2018)

கடைசி தொடர்பு:13:35 (03/09/2018)

முடி உதிர்ந்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு! அழகு நிலையம் மீது தந்தை புகார்

பெங்களூரில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அழகு நிலையம் மீது அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவி


கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரபா - சைலா தம்பதி. இவர்களது மகள் நேகா மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். தனது கூந்தலை அழகுபடுத்துவதற்காக மாணவி மைசூருவில் உள்ள அழகு நிலையத்துக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு பயன்படுத்திய கெமிக்கலால் அவரது கூந்தல் உதிரத் தொடங்கியுள்ளது. இதனால் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களின் கேலிப்பேச்சுக்கு ஆளாகியுள்ளார். இதில் மனவேதனையடைந்தவர் தனது குடும்பத்தினரை தொடர்புகொண்டு கல்லூரிக்குச் செல்ல முடியாது என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஆண்டு தனது கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். தனது முடியை முழுவதுமாக மொட்டை அடித்துள்ளார். ஒருவருடம் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில், பெற்றோர்கள் அவரை சமாதானப்படுத்தி இந்தாண்டு கல்லூரியில் சேர்த்துள்ளனர். அவருக்கான கல்லூரிக் கட்டணம் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தியுள்ளனர். ஆனால், தொடர்ந்து முடி உதிரும் பிரச்னை இருந்து வந்துள்ளது. ஒரு வார காலத்திலே அவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அவரின் பெற்றோர் கட்டாயப்படுத்தி மீண்டும் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆகஸ்ட் 21-ம் தேதி அவர் தங்கிருந்த விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அவரது பெற்றோருக்கு போன் செய்து, தான் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவரின் பெற்றோர் கடந்த 28-ம் தேதி மாணவிக்கு போன் செய்துள்ளனர். ஆனால், அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. நாள் முழுவதும் அழைத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்தவர்கள் உடனடியாக மைசூர் விரைந்துள்ளனர். தங்கும் விடுதியில் விசாரித்ததில் அவர் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்தபோது மாணவி கல்லூரிக்கு எடுத்துச்செல்லும் பையுடன் காலை 9.45 மணிக்கு வெளியில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவி காணாமல்போனது தொடர்பாக ஜெயலட்சுமிபுரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பெற்றோர் மற்றும் உறவினர்களும் மாணவியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி மாணவியின் உடல் லட்சுமண தீர்த்த நதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர்  உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், இறந்தது நேகா தான் என்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில், மகளின் தற்கொலைக்கு அழகு நிலையம்தான் காரணம் என அவரின் தந்தை காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். அழகு நிலையத்தின் தவறால்தான் என் மகளுக்கு முடிக்கொட்டும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துள்ளார் எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.