மகளுக்குக் கீழ் பணியாற்றும் போலீஸ் அதிகாரி! - சல்யூட் அடித்து நெகிழவைக்கும் தந்தை

``காவல் துறையில் உயர் அதிகாரியான தனது மகளின் கீழ் வேலைசெய்வது பெருமையாக உள்ளது'' என நெகிழ்கிறார், போலீஸ் அதிகாரியான உமா மகேஷ்வர சர்மா.

அடுத்த ஆண்டு ஓய்வுபெற உள்ள போலீஸ் அதிகாரி உமா மகேஷ்வர சர்மா, தற்போது ஹைதராபாத் ரக்சகொண்டா பகுதிக்கு உட்பட்ட பிரிவில் துணை ஆணையராக உள்ளார். இவரின் மகள் சிந்து சர்மாவும் ஒரு போலீஸ் அதிகாரியே. `மகளின் முன் நின்று சர்மா சல்யூட் அடிக்கும் அந்த நிமிடங்கள், மிகவும் பூரிப்பாகவும் பெருமையாகவும் இருந்ததாக உணர்ச்சி பொங்கக் கூறுகிறார், உமா மகேஷ்வர சர்மா. 

தந்தை உமா மகேஷ்வர சர்மா மற்றும் அவரது மகள் சிந்து சர்மா

Photo credit -twitter/@anita_chauhan80

ஐபிஎஸ் அதிகாரியான சிந்து, 2014-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜை சேர்ந்தவர். பயிற்சி முடித்து பல மாநிலங்களில் பணிபுரிந்தவர். தற்போது, தெலங்கானாவில்  உள்ள ஜெக்டியால் மாவட்டத்தின் கண்காணிப்பாளராக உள்ளார். இப்போது, தந்தை-மகள் இருவரும் ஒரே மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகளாகப் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், தங்களின் வேலை சம்பந்தமாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வும் ஏற்பட்டுள்ளது.  சமீபத்தில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிடச் சென்றிருக்கிறார் சிந்து. அப்போது, பணியில் இருந்த சிந்துவின் தந்தை, உயரதிகாரியான தனது மகளைக் கண்டவுடன் சல்யூட் அடித்துத் தன் பணியைத் தொடர்ந்துள்ளார்.

மகள் முன் சல்யூட் அடித்து வேலை செய்த உணர்ச்சித் தருணம் குறித்து சர்மா கூறுகையில், `நாங்கள் இருவரும் நேருக்கு நேராக சந்தித்துக்கொண்டது இதுதான் முதல்முறை. நான், உயர் அதிகாரியான சிந்துவைக் காணும்போதெல்லாம் சல்யூட் அடிக்கிறேன். நாங்கள் எங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்கிறோம். பணியில் இதைப் பற்றி விவாதிக்க மாட்டோம். மற்றபடி வீட்டில் இருக்கும்போது, அவருக்கு நான் தந்தை, எனக்கு அவர் மகள். மற்ற தந்தைகளைப்போல வீட்டில் நானும் பொறுப்புடன் இருப்பேன்' எனக் கூறினார். 

சிந்து கூறுகையில், `நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்வதற்கான நல்ல வாய்ப்பு என்றே கருதுகிறேன்' என்றார். 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!