வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (03/09/2018)

கடைசி தொடர்பு:16:15 (03/09/2018)

ஒரு மாணவிக்காக இயங்கும் அரசு தொடக்கப்பள்ளி!

மைசூரில், ஒரே ஒரு மாணவிக்காக அரசு தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது.

அரசு தொடக்கப்பள்ளி

File Photo

கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த, கிருஷ்ணா நகர் தாலுகாவுக்கு உட்பட்ட யரேமனுகனஹள்ளி (Yaremanuganahalli) கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது.
இந்தப் பள்ளியில், ஒரே ஒரு மாணவி மட்டும் கடந்த மூன்று வருடங்களாகப் பயின்றுவருகிறார். இங்கு, இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். நயீமா ( Nayeema) எனும் அந்த மாணவி, மூன்றாம் வகுப்பு பயின்றுவருகிறார். இவரது தந்தை விவசாயக் கூலி. காலை 9.30 மணிக்கு பள்ளி செல்லும் நயீமா, 6 மணி நேரம் பள்ளியில் இருக்கிறார். ஆசிரியர்கள் சபியா சுல்தான் உருதும், நாகராஜூ கன்னடமும் கற்பிக்கிறார்கள்.

இதுதொடர்பாக கிராமத்தினர் கூறுகையில், ''இந்தத் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில், ஏராளமான மாணவர்கள் இங்கு கற்றார்கள்.
ஆரம்பத்தில், இது கன்னடப்பள்ளியாக இருந்தது. இந்தப் பகுதியில் ஏராளமான இஸ்லாமியக் குடும்பங்கள் இருந்ததால், உருது கற்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதையடுத்து, முதன் முறையாக இந்தத் தொடக்கப்பள்ளியில் உருது கற்பிக்கப்பட்டது. நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்ததால், தற்போது இந்தப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது'' என்றனர்.