`கேரளாவை மறுசீரமைக்க ரூ.30,000 கோடி தேவை!'- அமைச்சர் தாமஸ் ஐசக் பேட்டி | Kerala needs Rs 30,000 crore to rebuild says finance minister thomas isaac

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (03/09/2018)

கடைசி தொடர்பு:17:10 (03/09/2018)

`கேரளாவை மறுசீரமைக்க ரூ.30,000 கோடி தேவை!'- அமைச்சர் தாமஸ் ஐசக் பேட்டி

வெள்ளத்தால் பலத்த சேதம் கண்டுள்ள கேரளாவை மறுசீரமைக்க ரூ.30,000 கோடி தேவைப்படுவதாக, அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். 

கேரளா நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்

கேரளாவில், ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய தென்மேற்குப் பருவமழை பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். அதே நேரத்தில், வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, சாலை துண்டிப்பு, கட்டட இடிபாடுகள் போன்ற சேதங்களும் என்னில் அடங்காதவை. இதனால், கேரளாவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர மக்கள் அளித்துவரும் நிவாரண நிதியுதவி ரூ.1,000 கோடியைத் தாண்டியுள்ளது. முன்னதாக, முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.600 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், கேரளாவை மறுசீரமைக்க ரூ.30,000 கோடி தேவைப்படுவதாக அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், `மூலதனச் செலவினங்களுக்காக ரூ.20,000 கோடி, வருவாய் செலவினங்களுக்கு ரூ.10,000 கோடி தேவைப்படுகிறது. அதோடு, மக்களிடமிருந்து நிவாரண நிதியாக ரூ.6,000 கோடி வரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் 2005 மற்றும் தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்மூலம் ரூ.4,000 கோடி வர வாய்ப்பு உள்ளது. இதோடு, கடன் பெற மத்திய அரசிடம் முறையிடப்படும்' என்றார்.