`எட்டு மாநிலங்களில் 1,400 பேர்; கேரளாவில் 488 பேர்!' - மழையால் உயிரிழந்தவர்களின் விவரம் | 1,400 people including in Kerala people lost their lives due to rains

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (03/09/2018)

கடைசி தொடர்பு:18:20 (03/09/2018)

`எட்டு மாநிலங்களில் 1,400 பேர்; கேரளாவில் 488 பேர்!' - மழையால் உயிரிழந்தவர்களின் விவரம்

இந்த ஆண்டு பருவமழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 1,400 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கேரளா வெள்ளம் பாதிப்பு

உத்தரகாண்ட், அஸ்ஸாம், நாகாலாந்து, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு பெய்த பருவமழையால், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 1,400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.இ.ஆர்.சி (National Emergency Response Centre) வெளியிட்டுள்ளது. 

என்.இ.ஆர்.சி வெளியிட்ட அறிக்கையில், ``கேரளாவில் பெய்த கனமழையால் 488 பேர் உயிரிழந்துள்ளனர். 14 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 54.11 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 14.52 லட்சம் மக்கள், தங்கள் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். மாநிலத்தின் தென்பகுதியில், 57,024 ஹெக்டேர் நிலப்பரப்பில் விலை நிலங்கள், பயிர்கள் எனப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பெய்த மழை, இந்த நூற்றாண்டின் மிக மோசமான பேரழிவு. 

பேரிடர் மீட்பு குழுவினர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 254 பேர், கர்நாடகாவில் 170 பேர், மகாராஷ்டிராவில் 139 பேர், குஜராத்தில் 52 பேர், அஸ்ஸாமில் 50 பேர், உத்தரகாண்ட்டில் 37 பேர், ஒடிசாவில் 29 பேர் மற்றும் நாகாலாந்தில் 11 பேர் மழையின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரையிலும், நாட்டில் 43 பேர் மழை வெள்ளத்தால் காணாமல்போயுள்ளனர். கேரளாவில் 15 பேர் காணவில்லை. அதோடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 386 பேர் காயமடைந்துள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.