வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (03/09/2018)

கடைசி தொடர்பு:21:33 (03/09/2018)

`ஒழுக்கத்தை வலியுறுத்தினால் சர்வாதிகாரமா...’ என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர், 'ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினாலே, அது சர்வாதிகாரம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

`ஒழுக்கத்தை வலியுறுத்தினால் சர்வாதிகாரமா...’ என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

ண்மைக்காலமாகப் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, இளைஞர்களை நோக்கியதாகவே இருக்கிறது. அடுத்தாண்டில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், பி.ஜே.பி குறித்தும், தமது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு குறித்தும் நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகத் தீவிரமாக உள்ளார். இதை வெளிப்படுத்தும் விதமாகவே அவருடைய சமீபத்திய பேச்சுகள் அமைந்துள்ளன.

கடந்த வாரத்தில் சமூக வலைதள தினத்தன்று, அவற்றைப் பயன்படுத்துவோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், ஆக்கபூர்வமான தகவல்களை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். "சமூக வலைதளங்களில் இளைஞர்கள் வெளிப்படையாகக் கருத்துகளைத் தெரிவித்து வருவது வரவேற்கத்தக்கது; என்றாலும், உரையாடல்களில் பொறுப்பு உணர்வு இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு என் வாழ்த்துகள். இளைஞர்கள் தங்களின் உணர்வுகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்த முன்வர வேண்டும்" என்று பிரதமர் மோடி ஏற்கெனவே சில தினங்களுக்கு முன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர், 'ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினாலே, அது சர்வாதிகாரம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வலியுறுத்துவோர், சர்வாதிகாரியாகச் சித்திரிக்கப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் பேசினார்.

பி.ஜே.பி மூத்த தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த எம்.வெங்கைய நாயுடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதியன்று, குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, கடந்து வந்த பயணங்கள் மற்றும் அனுபவங்களைத் தொகுத்து, "Moving on, Moving Forward: A Year in Office" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெங்கய்யா நாயுடு எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசியபோதுதான், பிரதமர் மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்தார். குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் வெங்கைய நாயுடுவின் ஓராண்டு அனுபவங்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

வெங்கைய நாயுடுவின் குணநலன்களைப் பாராட்டிய பிரதமர், எதிர்காலத்தைப் பற்றிய அவரின் சிந்தனைகள், நாட்டுக்கு அவர் ஆற்றியுள்ள பணிகள், அவரின் நேரம் தவறாமை உள்ளிட்ட சிறந்த பண்புகளைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி, அவருக்குப் பாராட்டு தெரிவித்தார். 

பிரதமர் நரேந்திர மோடி - புத்தக வெளியீட்டு விழா

விழாவில் பேசிய மோடி, "வெங்கைய நாயுடுவுடன் பல வருடங்களாக இணைந்து பணியாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மாணவப் பருவத்தில் 10 ஆண்டுகளும் மாநில மற்றும் தேசிய அரசியலில் 40 ஆண்டுகளும் ஆக மொத்தம் 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்டவர் வெங்கைய நாயுடு. தனக்கு அளிக்கப்படும் பொறுப்பை உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையுடன் அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பதில் மிகவும் திறமைசாலி. விவசாயிகள் நலனில் அவர் மிகுந்த அக்கறை கொண்டவர். நாடு முழுவதும் உள்ள பாமர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற வேட்கை வெங்கைய நாயுடுவிடம் உள்ளது.

நேரம் தவறாமை மற்றும் ஒழுக்கத்தை மிகத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர் வெங்கைய நாயுடு. எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அவர் நேரம் தவறிச் சென்றதாக இதுவரை வரலாறு இல்லை. அவர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்த பிரதமரின் ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

தற்போது, குடியரசு துணைத் தலைவராகியுள்ள அவர், மாநிலங்களவையை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுச் செயல்படுகிறார். மாநிலங்களவை ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும்; பயனுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டும் என்ற பேராவல் வெங்கைய நாயுடுவுக்கு உள்ளது. அவருடைய அளப்பரிய முயற்சிகளால் அந்தச் சூழல் விரைவில் உருவாகும். 

'பொதுவாகவே ஒழுக்கம் சார்ந்து செயல்படுங்கள்' என்று அறிவுரை சொல்பவர்களை பெரும்பாலானோருக்குப் பிடிக்காது. மிகச் சிறந்த நெறியாளரான வெங்கைய நாயுடுவும் அந்த அறிவுரையைத்தான் வழங்குகிறார். அவர் சொல்லும் ஒழுக்கத்தை அவரே கடைப்பிடிப்பவர். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய வலியுறுத்தல்களை முன்வைப்பவர்கள் சர்வாதிகாரிகள் போலவும், அடக்குமுறையாளர்கள் போலவும் சித்திரிக்கப்படுகின்றனர்" என்றார்.

பொதுவாழ்வில் வெங்கைய நாயுடுவின் நீண்டநெடிய பயணத்தையும் பிரதமர் தன் உரையில் பாராட்டத் தவறவில்லை. அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து கிடைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இதன்மூலம் சமூக நீதியை நோக்கிய மத்திய அரசின் நிலைப்பாடு வெளிப்பட்டிருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார். வெங்கைய நாயுடுவின் கனவை நிறைவேற்றும் வகையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் அரசியல் மாறுபாடுகளைக் கடந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். 

இந்தியாவின் சக்திவாய்ந்த பன்மொழி கலாசாரம் குறித்த பொது விழிப்பு உணர்வை அதிகரிப்பது, உலக அளவில் சமாதானம் திகழும் இந்தியாவின் பெருமைகளை வெளிப்படையாகப் பறைசாற்றுவது, விவசாயத்தின் மூலம் வருவாய் அதிகளவில் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் வெங்கைய நாயுடுவின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், ஹெச்.டி.தேவகவுடா, மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன் மற்றும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்