மோசமாகும் ஹர்திக் படேலின் உடல்நிலை - பிரதமருக்கு கடிதம் எழுதிய தேவகவுடா

குஜராத்தில் சிறுபான்மையினருக்கு உரிய இட ஒதுக்கீடு கோரி தொடர்ந்து 11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர் ஹர்திக் படேல். 

ஹார்திக் படேல்

குஜராத்தில் வாழும் படேல் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கடந்த மாதம் 25-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்  பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின்  (Patidar Anamat Andolan Samiti) தலைவர் ஹர்திக் படேல். 11-வது நாளாகத் தொடரும் இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் நேரில் வந்து இவருக்கு ஆதரவு தெரிவித்துச் சென்றனர். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஹர்திக்கின் உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாகவும் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், ஹர்த்திக் படேல் தனது உண்ணாவிரத்தைக் கைவிட மறுத்து மருத்துவமனை செல்வதைத் தவிர்த்து வருகிறார். இவரின் போராட்டத்தால் குஜராத் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

ஹர்திக்கின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, தான் ஒருவேளை உயிரிழக்கும் பட்சத்தில் தன் சொத்துகள் யாருக்குச் சேர வேண்டும் என்பதையும் உயில் எழுதிவிட்டார். அதன்படி தன் வங்கிக் கணக்கில் உள்ள 50,000 ரூபாயில் 20,000 தன் பெற்றோர்களுக்கும், மீதமுள்ள பணம் தனது சொந்தக் கிராமத்தில் வாழும் நோயாளிகள் மற்றும் பசுக்களின் வாழ்விடமாக பஞ்ச்ரபோல் இல்லத்துக்கும் சேர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் நிறுவனருமான ஹெச்.டி தேவகவுடா, ஹர்திக் படேலின் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!