வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (04/09/2018)

கடைசி தொடர்பு:10:30 (04/09/2018)

தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன்! - பதக்கத்துடன் திரும்பிய வீரருக்கு வந்த அதிர்ச்சித் தகவல்

ஆசிய விளையாடுப்போட்டி

ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் தேஜீந்தர் சிங் தூரை நாடே கொண்டாடுகிறது. ஆனால், அவரது வீடு களையிழந்து காணப்படுகிறது. தேஜீந்தர் சிங் தூரும் தனது வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை. இந்தோனேசியாவில் இருந்து இந்தியா திரும்பியவுடன். டெல்லியில் இருந்து மிக விரைவான தனது சொந்த மாநிலமான பஞ்சாப்புக்கு விரைந்தார். தான் மிகவும் நேசிக்கும் தன் தந்தையிடம் தங்கப் பதக்கத்தைக் காண்பிக்க விரைந்தார். ஆனால், சில மணி நேரங்களில் அவர் விரும்பாத அந்தத் தகவல் வந்தது. புற்றுநோயுடன் கடந்த இரண்டு வருடமாக போராடிக்கொண்டிருந்த அவரின் தந்தையின் இறப்புச் செய்தியை உறவினர்கள் தெரிவித்தனர். தன் தந்தையின் உடல்நலம் குறித்து தூருக்கு தெரியும். அதன் காரணமாகவே டெல்லியில் இருந்து மிக விரைவாக விரைந்தார். சில மணி நேரங்களில் தன் சொந்த ஊரை அடைந்திருப்பார். ஆனால், அதற்குள் அவர் விரும்பாத இந்தத் தகவல் வந்து சேர்ந்தது. தேஜீந்தர் சிங் தூர் இந்தியாவுக்காக தங்கம் வெல்ல வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. அந்தப் பதக்கத்தை தன் கைகளில் ஏந்தி மகனின் பெருமையைப் பேச வேண்டும் என எண்ணி இருந்தார். தந்தையின் ஆசைப்படி அவர் பதக்கம் வென்றுவிட்டார். அந்தப் பதக்கம் தற்போது அவர்களது வீட்டில்தான் உள்ளது. அதை தொட்டுப் பார்க்கவோ, மகிழ்ச்சியை வெளிப்படுத்தவோ அவரது தந்தை இல்லை.