வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (04/09/2018)

கடைசி தொடர்பு:15:10 (04/09/2018)

மேகதாதுவில் புதிய அணை! - சாத்தியக்கூறு அறிக்கையைத் தாக்கல் செய்த கர்நாடகா

சமீபத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துக் கேரள, தமிழக முதலமைச்சர்கள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் அணையைக் கட்டுவதற்குக் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேகதாதுவில் 82 டி.எம்.சி அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறு குறித்த அறிக்கையை மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது. 

குமாரசாமி

தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு காட்டிய தீவிரத்தால் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காவிரி ஆற்றிலிருந்து சுமார் 300 டி.எம்.சிக்கும் அதிகமான தண்ணீர் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தது. அதில், மேட்டூர் அணையில் 93 டி.எம்.சி தண்ணீரைத்தான் தேக்கி வைக்க முடிந்தது. பாசன நீருக்குப் போக மீதமுள்ள தண்ணீர் கடலில் சேர்ந்தது. இந்த நிலையில், ' 5,912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேகதாதுவில் அணை கட்டி, குடிநீர் பயன்பாட்டுக்கும், 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்போவதாகவும்' திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கர்நாடக அரசு. இதுகுறித்து மத்திய நீர் வள அமைச்சகத்தின் சார்பில் தமிழக மற்றும் கேரள மாநிலங்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய மின்சார ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 

இத்திட்டம் குறித்து விளக்கக் கூட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் குமாரசாமி. இதுதொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துக் கேரள, தமிழக முதலமைச்சர்கள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தியிருக்கிறது கர்நாடக அரசு.