கோவா விமான நிலையத்தில் அமித் ஷா கட்சிக் கூட்டம் நடத்திய போது என்ன நடந்தது? 

தூத்துக்குடி சென்ற விமானத்தில் `பாசிச பாரதிய ஜனதா ஆட்சி ஒழிக ' என்று கோஷமிட்ட ஷோஃபியா என்ற மாணவிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசைக்கும் விமான நிலையத்தில் வாய்த் தகராறு முற்றியது. பாதுகாப்பு மிக்க விமான நிலையத்தில் இருவரும் மோதிக் கொண்டனர். தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவி ஷோபியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விஷயம் இப்படியிருக்க, கோவா விமான நிலையத்திலேயே பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா கட்சிப் பொதுக் கூட்டம் நடத்தியதும் உண்டு. 

அமித் ஷா நடத்திய கூட்டம்

கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமித் ஷா கோவா மாநிலத்துக்குச் சென்றார். பின்னர், கோவா விமான நிலையத்திலேயே கட்சிப் பொதுக்கூட்டம் நடத்தினார். விமான நிலையத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மைக்குகள் கட்டி கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார். மேடையில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் அமர 12 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இந்தியாவில் பாதுகாப்பு நிறைந்த விமான நிலைய வளாகத்திலேயே நடந்த முதல் கட்சிப் பொதுக் கூட்டம் இதுதான். 

``பாதுகாப்பு நிறைந்த விமான நிலையத்திலேயே கட்சிப் பொதுக்கூட்டம் நடத்தி பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் விமான நிலைய அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என்று காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்தது. மனித உரிமை ஆர்வலர் ரோட்ரிகஸ் என்பவர் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், கோவா மாநிலத் தலைமைச் செயலர், கோவா மாநில டி.ஜி.பி ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ரோட்ரிகஸ் அளித்த புகாரில், ``விமான நிலையத்தில் அமித் ஷா நடத்திய பொதுக் கூட்டத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். விமான நிலையத்துக்கு காரில் வந்தவர்கள் இறங்க 5 நிமிடங்கள் கூட அவகாசம் கொடுக்கப்படவில்லை'' என்று குற்றம் சாட்டியிருந்தார். புகார் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!