வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (04/09/2018)

கடைசி தொடர்பு:16:55 (04/09/2018)

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பொருள்கள்... உம்மன்சாண்டி உதவியால் பெண்ணுக்கு நடந்த திருமணம்!

கேரளாவில் பெய்த கனமழையால், கடந்த மாதம் நடக்க இருந்த ஏழைப்பெண்ணின் திருமணம் தடைபட்டது. அதையறிந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, மணப்பெண்ணுக்கு உதவிசெய்து, திருமணத்தை நடத்திவைத்ததுடன், மணமக்களை வாழ்த்தினார்.

கேரளாவில் ராகுல்

கேரளாவில், கடந்த மாதம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், லட்சக்கணக்கான மக்கள் வசிக்க இடம் இல்லாமல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மண் சரிவு காரணமாக உயிரிழப்புடன் பொருள் இழப்புகளும் பெருமளவில் ஏற்பட்டன. அந்தப் பாதிப்புகளில் இருந்து கேரள மக்கள் தற்போது மீண்டு வருகிறார்கள். 

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் ஆலப்புழா மாவட்டம், திருவாவண்டூர் பகுதியைச் சேர்ந்த மாயா என்ற ஏழைப்பெண்ணின் திருமணம் நின்றுவிட்டது. கடந்த இரு வருடங்களுக்கு முன் தந்தை கிருஷ்ணனை இழந்த மாயா, தனது தாய் மணியுடன் வசித்து வருகிறார். அவருக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. அதற்கான பொருள்களை எல்லாம் வாங்கி தயார் நிலையில் இருந்தபோது, அவரது வீடு வெள்ளத்தில் மூழ்கியது. 

அதனால், கல்யாணச் சேலை மற்றும் விருந்துக்காக வாங்கப்பட்ட மளிகைப் பொருள்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணானது. மாயாவும் அவரது தாயார் மணியும் வீட்டைவிட்டு வெளியேறி, செங்கனூரில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியின் முகாமில் தங்கி இருந்தார்கள். தங்களின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற வேதனை இருவரையும் ஆக்கிரமித்திருந்தது. அருகில் இருந்தவர்களும் உறவினர்களும் ஆறுதல் தெரிவித்தார்கள். 

திருமணம் செய்த மாயாவுக்கு வாழ்த்து

pic courtasy : manoramaonline

இந்த நிலையில், வெள்ளச் சேதத்தை ராகுல் காந்தி பார்வையிட வந்தபோது, அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. செங்கனூரில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி முகாமுக்கு ராகுல் காந்தி வந்தபோது, அவரிடம் தங்களுடைய நிலைபற்றி மணியும் மாயாவும் கண்ணீர் மல்க எடுத்துக்கூறினார்கள். அவர்களின் சோகக்கதையைக் கேட்ட ராகுல் காந்தி, தேவையான உதவிகளைச் செய்யுமாறு தன்னோடு வந்திருந்த கேரள காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன்சாண்டியைக் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், மணியின் வங்கிக் கணக்குக்கு உம்மன்சாண்டி பணம் அனுப்பிவைத்தார். அதனால் மகிழ்ச்சி அடைந்த மணி, அந்தப் பணத்தைக்கொண்டு தனது மகள் மாயாவின் திருமணத்தை நடத்த ஏற்பாடுகளைச் செய்தார். மாயாவுக்கு ஆலப்புழாவைச் சேர்ந்த ஆகாஷ் என்பவருடன் குளத்துக்கரா கோயிலில் வைத்து செப்டம்பர் 2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதில், நேரில் கலந்துகொண்ட உம்மன்சாண்டி மணமக்களை வாழ்த்தினார். அவரது இந்த மனிதாபிமான உதவியை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.