பா.ஜ.க-வில் சேர்கிறார் மோகன்லால்?

மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால், பாரதிய ஜனதாவில் சேர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலின்போது அந்தக் கட்சியின் சார்பாக திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்கிற தகவல் வேகமாகப் பரவிவருகிறது. 

மோகன்லால் பிரதமருடன் சந்திப்பு

கேரள நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லால், பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், அந்த அமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. நடிகர் என்பதையும் தாண்டி, மோகன்லாலுக்கு சமூக ஆர்வலர் என்கிற அடையாளத்தை உருவாக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

கேரளாவில், பாரதிய ஜனதா கட்சியால் இதுவரை வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. அந்தக் கட்சியில் ஓ.ராஜகோபால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இது தவிர, அக்கட்சியால் பெரிய வெற்றிகள் எதையும் பெற முடியவில்லை. அதனால், முக்கிய நடிகர்களைக் கட்சியில் சேர்த்து, அதன்மூலம் பலத்தை அதிகரித்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க-வில் சேர்ந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்காகப் பிரசாரம்செய்த அவர், மாநிலங்களவை எம்.பி-யாக்கப்பட்டார்.

இந்த நிலையில், மோகன்லாலை கட்சியில் இணைக்கும் முயற்சியை பா.ஜ.க தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே, அவர் பா.ஜ-வுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தார். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அவர் ஆதரித்துப் பேசியதால், அரசியல்வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரை கட்சியில் இணைத்து, அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூருக்கு எதிராகக் களம் இறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பிரதமருடன்

இந்த நிலையில், மோகன்லால் நேற்று (3-ம் தேதி) டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். சர்வதேச மலையாள ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பாக, புதிய கேரளாவை உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் பங்கேற்பதாகக் கூறினார். இது தொடர்பாக மோகன்லால் தனது ட்விட்டர் பதிவில், ’’பிரதமரை ஜன்மாஸ்டமி தினத்தில் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் எங்களின் விஸ்வசாந்தி ஃபவுண்டேஷன் குறித்தும் அதன்மூலம் தேவையில் இருப்பவர்களுக்கு உதவுவதையும் மருத்துவ வசதி அளிப்பதையும் பற்றி விளக்கினேன். நாங்கள் நடத்த இருக்கும் புதிய கேரளா தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அத்துடன், நாங்கள் நடத்திவரும் கேன்சர் கேர் சென்டர் பற்றியும் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’மோகன்லாலை சந்தித்துப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய மனிதாபிமானச் செயல்கள் பாராட்டுக்குரியது. சமூக அக்கறையுடன் அவர் செயல்பட்டுவருவது வரவேற்கத்தக்கது’’ என்று தெரிவித்துள்ளார். மோகன்லால் பாரதிய ஜனதாவில் சேருவார் என்கிற தகவல், கேரளாவில் பரபரப்பான விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!