வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (04/09/2018)

கடைசி தொடர்பு:18:28 (04/09/2018)

திடீரென இடிந்துவிழுந்த பாலம்... அந்தரத்தில் தொங்கிய பஸ், கார்கள்... பறிபோன 5 உயிர்கள்

கொல்கத்தாவில் பழைமையான பாலம் இடிந்து விழுந்ததில், 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலம்


கனமழை காரணமாக மேற்கு வங்க மாநிலத் தலைநகர், கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள, மஜர்ஹட் என்ற பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது .விபத்து நடந்த இடத்துக்கு வந்த பேரிடர் மீட்புப்படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து

இந்தப் பாலத்துக்கு கீழே சென்றுகொண்டிருந்த, பேருந்து ஒன்றும், அவ்வழியாகச் சென்ற கார்களும் விபத்தில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். எந்நேரமும் வாகனங்கள் பயணிக்கும் பிரதான பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ``இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் குறித்து, தகவல்களைப் பெற்று வருகிறோம். விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.