`வெள்ளப் பாதிப்புக்கே அனைத்து நிதியும்' - ஓராண்டு நிகழ்ச்சிகளை ரத்து செய்த கேரள அரசு!

கேரளாவில் ஒரு ஆண்டுக்கு எந்த அரசு நிகழ்ச்சியும் கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வெள்ளப் பாதிப்பு

கேரள மக்களுக்கு இந்த ஆண்டு சோகமாகவே அமைந்துள்ளது. நிபா வைரஸ் தாக்கம், ஒகி புயல், மழை வெள்ளப் பாதிப்பு, இதோ தற்போது எலிக் காய்ச்சல் என இந்த வருடம் முழுவதும் அடுத்தடுத்த சோக நிகழ்வுகள் கேரளாவில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இதில் கடந்த மாதம் ஏற்பட்ட பருவ மழை பாதிப்பு தான் அதிகம்.  மழை, வெள்ளப் பாதிப்புக்கு 387 பேர் உயிரை இழந்துள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது. சுமார் 54 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தவித்தனர். நகரங்கள், கிராமங்கள், மலைப்பகுதிகள் என அனைத்தும் சேதங்களுக்குத் தப்பவில்லை.  இந்தப் பாதிப்புகளில் இருந்து தற்போதுதான் மெல்ல மெல்ல மீளத் துவங்கியுள்ளனர். 

பலத்த சேதத்தை எதிர்கொண்டுள்ள கேரளத்தை மறுசீரமைக்க மாநில அரசு நிதி திரட்டி வருகிறது. பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 26,000 கோடி அம்மாநிலம் அளவுக்குப் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதால் அதிகமான நிதி தேவைப்படுகிறது. இதனைத் திரட்ட மாநில அரசு தற்போது பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. அந்தவகையில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களிடம் நிதி திரட்டுவதற்காக 14 நாடுகளுக்குச் செல்ல உள்ளனர் அம்மாநில அமைச்சர்கள். இதேபோன்று சிக்கன நடவடிக்கைகளிலும் மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, ஓராண்டுக்கு எந்த அரசு நிகழ்ச்சியும் கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள அரசு

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``அடுத்த ஓராண்டுக்கு அரசு சார்பில் நடத்தப்பட இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. பெருமளவு பணம் செலவாகும் நிகழ்ச்சிகளான கேரள சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கான நிதி ஆதாரங்கள் அனைத்தும் முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டு வெள்ள நிவாரணப் பணிகளுக்கே செலவிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!