ஜப்பான் செல்லும் கேரள சுற்றுலாத்துறை அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை! | Kerala minister facing problems after his japan visit plan

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (05/09/2018)

கடைசி தொடர்பு:13:50 (05/09/2018)

ஜப்பான் செல்லும் கேரள சுற்றுலாத்துறை அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை!

ரசு செலவில் இந்த மாதம் 20-ம் தேதி ஜப்பான் செல்லும் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனை பல்வேறு சர்ச்சைகள் சுற்றி வட்டமிடுகின்றன.

கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

கேரள மாநிலம் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு எழுவதற்கான நடவடிக்கைகளில் அரசும் மக்களும் ஈடுபட்டுள்ளனர். கேரளத்தை புனர் நிர்மாணம் செய்ய 30,000 கோடி ரூபாய் திரட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் அரசும், மக்களும் செயல்படுகிறார்கள். இதற்காக நிதி திரட்ட கேரள மாநில அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், அதற்கு முன்பாக கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வரும் 20-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை ஜப்பானில் நடக்கும் 'ஜப்பான் அசோசியேசன் ஆப் டிராவல் ஏஜென்சிஸ்' நடத்தும் டூரிஸம் எக்ஸ்போவில் கலந்துகொள்ள இருக்கிறார்.

அரசு செலவில் ஜப்பான் சென்றுவரும் நடவடிக்கைகளில் அமைச்சர் ஈடுபட்டுவருவதாகவும், அவருடன் சில அதிகாரிகளையும் அரசு செலவில் அழைத்துச்செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. பெருமழையால் அழிவு ஏற்பட்டுள்ளதால் கேரளத்தில் ஒரு ஆண்டு எந்தக் கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது என தீர்மானித்திருக்கும் நிலையில், அமைச்சர் வெளிநாட்டுக்கு ஜாலிடூர் போகலாமா என்ற கேள்வியும் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனைச் சுற்றுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஜப்பான் செல்வதற்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.