வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (05/09/2018)

கடைசி தொடர்பு:16:20 (05/09/2018)

நாகாலாந்துக்கு ரூ.1.25 கோடி நிவாரண நிதி வழங்கிய `தோனி’ பட ஹீரோ!

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலத்த சேதம் அடைந்துள்ள நாகாலாந்து மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.1.25 கோடி வழங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்.

நடிகர் சுஷாந்த் சிங்

கேரளாவைப் போலவே நாகாலாந்திலும் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. நாட்டில், பல மாநிலங்களில் இந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்துள்ளது. அதே வேளையில், மழையால் ஏற்பட்ட சேதங்களும் அதிகம். அதன் வகையில், தற்போது நாகாலாந்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலமே ஸ்தம்பித்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரையிலும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையில், மழையால் ரூ.800 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கணித்துள்ளது. மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.100 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் நெய்பு ரியோ கோரிக்கை விடுத்துள்ளார். அதனுடன், மழையால் தத்தளித்து வரும் நாகாலாந்து மக்களுக்கு உதவுங்கள் என மக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தார் முதல்வர். 

நாகலாந்து முதல்வர் மற்றும் நடிகர் சுஷாந்த் சிங்

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாகாலாந்து மக்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததின் மூலம் புகழ்பெற்ற நடிகராக சுஷாந்த் சிங் வலம் வருகிறார். முன்னதாக, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தங்கள் உடைமைகளை இழந்த மக்களுக்காகவும், மாநிலத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்காகவும் 1 கோடி ரூபாய் நிவாரண நிதியாக சுஷாந்த் சிங் அளித்தார். தற்போது, வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள நாகலாந்துக்கு ரூ.1.25 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். 

முதல்வர் நெய்பு ரியோவை நேரில் சந்தித்து நிவாரண நிதியை நடிகர் சுஷாந்த் சிங் வழங்கியுள்ளார். ரூ.1.25 கோடியை நிவாரண நிதியாக வழங்கிய சுஷாந்த் சிங்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள முதல்வர், சுஷாந்த் சிங் நிதியுதவி வழங்கியபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணைத்து வெளியிட்டுள்ளார்.