வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (05/09/2018)

கடைசி தொடர்பு:17:29 (05/09/2018)

"அவர் அற்புதமான மனிதி!" - பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் நினைவு தினம்

"இடதுசாரி, இந்துத்துவ எதிர்ப்பாளர், மதச்சார்பற்றவர் இதுபோன்ற பட்டங்களை எல்லாம் மறந்துவிடுங்கள். அவரை நினைக்கும்போது இந்த வரி மட்டுமே மீண்டும் மீண்டும் என் மனத்துக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது... அவர் அற்புதமான மனிதி!"

செப்டம்பர் 5, 2017, அன்று மாலை பெங்களூருவில் மிதமான மழை. `கெளரி லங்கேஷ் பத்திரிக்கா'வின் அந்த வாரப் பிரிதியை முடித்துவிட்டு, காந்தி பஜாரிலிருக்கும் தன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார் கெளரி லங்கேஷ். மைசூர் ரோட்டில் அமைந்திருக்கும் ராஜராஜேஷ்வரி நகாராவிலிருக்கும் தன் தனி வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார் கெளரி லங்கேஷ். அவர் இறங்கிய அந்த நொடியே முகமூடி அணிந்த ஒருவனும் மோட்டார் பைக்கிலிருந்து இறங்கினான். அவன் கையில் துப்பாக்கி இருந்ததைக் கண்டு பதற்றத்தோடு கதவை திறக்க முயற்சி செய்தார் கெளரி. அதற்குள்ளாகவே அந்தத் துப்பாக்கியிலிருந்த இரண்டு குண்டுகள் அவர் மீது பாய்ந்தன. சுட்ட அடுத்த நொடியே பைக்கில் ஏறித் தப்பினான் அவன். அப்போது மணி இரவு 8:40. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்க்க அதிர்ச்சியடைந்தனர். செய்தி அறிந்த உடனே நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் ராஜராஜேஷ்வரி நகாராவை நோக்கி விரைந்தனர். இந்தப் படுகொலை நடந்து இன்றோடு சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. 

கெளரி லங்கேஷ்

படுகொலை செய்யப்பட்ட கெளரி லங்கேஷ், அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் நண்பர் என்பதால் இந்தச் செய்தி கேட்டதும் உடைந்துபோனார். உடனடியாக சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார். கூடுதல் ஆணையர் பிகே சிங் மற்றும் துணை ஆணையர் அனுசேத் (MN Anucheth) ஆகிய இருவரின் தலைமையில் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அவரைக் கொலை செய்தது இந்துத்துவா அமைப்புகள்தாம் என்று ஒரு தரப்பினர் சொல்ல, மற்றொரு தரப்பினர் அதை மறுத்து நக்சல்கள்தாம் என்றனர். இந்த யூகங்களையெல்லாம் தாண்டி விசாரணை நடத்தியது காவல்துறை. பின்பு நக்சல்களை இல்லை என்று கண்டறிந்த போலீஸார் இந்துத்துவா பக்கம் திரும்பினர். கொலை செய்தவன் ஒரு சின்னத் தடயத்தைக்கூட விட்டுச்செல்லவில்லை. சிசிடிவி கேமராக்கள் இல்லாத சாலைகளைப் பயன்படுத்தி கொலை செய்தவன் வந்துள்ளதாகவும் போலீஸார் தகவல் தெரிவித்தனர். லட்சக்கணக்கான போன் கால்களை ரெக்கார்டு செய்து விசாரித்தபோதும் ஒன்றும் சிக்கவில்லை. 

கொலை நடந்ததிலிருந்து 5 மாதங்கள் கழித்து பிப்ரவரியில்தான் இந்த வழக்கில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. `ஹோட்டே மஞ்சா' என்றழைக்கப்படும் துப்பாக்கி சப்ளை செய்யும் நவீன் குமார் என்பவனை போலீஸார் கைது செய்தனர். ஒருவார காலம் விசாரணை நடத்தியபின், கெளரி லங்கேஷை கொலை செய்தவர்களுக்குத் துப்பாக்கி வழங்கியதை ஒப்புக்கொண்டான். ஆனால், "இது திட்டம் வகுத்துச் செய்யப்பட்ட கொலை என்பதால் இதில் ஈடுபட்டவர்களுக்கு ஒருவரை ஒருவர் யார் என்றே தெரியாது" என்ற தகவலையும் வெளியிட்டது காவல்துறை. 

கெளரி லங்கேஷ்

பிகே சிங் மற்றும் அனுசேத் தலைமையிலான போலீஸார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அடுத்த 3 மாதங்களில் கொலை செய்த பரசுராம் என்ற 25 வயது இளைஞனைக் கைது செய்தது காவல்துறை. வட கர்நாடகாவின் சிந்தாகி (Sindhagi) என்ற ஊரில் பெட்டிக் கடை நடத்தி வந்த பரசுராம்தான் கொலை செய்தான் என்பது உறுதியானது. அவனுக்கு ஶ்ரீ ராமா சேனா அமைப்போடு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. பரசுராமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், இது பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறி வந்தனர். ஶ்ரீ ராமா சேனா அமைப்பு," எங்களுக்கும் பரசுராமுக்கும் எந்தத் தொடர்புமில்லை, அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்" என்றது. ஆர்.எஸ்.எஸ் இதனை மறுத்தது. 

பெங்களூரு சிஐடி தலைமையகத்தில் நடந்த தீவிர விசாரணைக்குப் பின், "பரசுராம் குற்றத்தை ஒப்புக்கொண்டார், இந்துக்களின் உணர்வுகளை கெளரி லங்கேஷ் காயப்படுத்தியதால், யாரோ அவருக்குக் கொடுத்த கட்டளையின் பேரில் இந்தக் கொலையைச் செய்துள்ளதாகக் கூறுகிறார். இதில் ஈடுபட்ட இன்னும் சில பேரின் பெயர்களையும் அவர் தெரிவித்துள்ளார்" என்று போலீஸார் விசாரணையின் முடிவில் தகவல் வெளியிட்டனர். சமீபத்தில், "கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றவர் பரசுராம்தான். அவருக்குப் பின்னால் இருந்து கட்டளையிட்டவரை கண்டுபிடித்தவுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்" என்று போலீஸார் கூறியுள்ளனர்.

கெளரி லங்கேஷ்

பத்திரிகையாளராக, அன்பு, வெறுப்பு ஆகிய இரண்டையும் சம்பாதித்துக் கொண்டவர் கெளரி லங்கேஷ். பேனாவைக் கொண்டு அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது சிலர் துப்பாக்கிக் கொண்டு இந்தப் படுகொலையை நிகழ்த்திவிட்டனர். இந்துத்துவா அரசியலுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்தவர் கெளரி லங்கேஷ். அதுமட்டுமல்லாது நக்சல்கள் மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். இந்தக் காரணங்களால் அவருக்கு எதிரிகள் ஏராளம். பல கட்டுரைகளை அவர் எழுதியபோது கொலை மிரட்டல்கள் வந்திருக்கலாம். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராதபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. கால்புர்கி, தபோல்கர், பன்சாரே எனக் கொள்ளப்பட்ட எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. அவர்களுக்கான நீதி கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் மனதில் நீங்கா இடம் கிடைத்துவிட்டது.  

கெளரி லங்கேஷின் முதலாம் நினைவு தினமான இன்று, அவரின் முன்னாள் கணவர் சிதானநத் ராஜ்காட்டா கூறிய வார்த்தைகளை நினைவுகூர்வோம் ``இடதுசாரி, இந்துத்துவ எதிர்ப்பாளர், மதச்சார்பற்றவர் இதுபோன்ற பட்டங்களை எல்லாம் மறந்துவிடுங்கள். அவரை நினைக்கும்போது இந்த வரிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் என் மனத்துக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது... அவர் அற்புதமான மனிதி!"

ஆம், கெளரி லங்கேஷ் அற்புதமான மனிதி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்