உயர் நீதிமன்றத்தின் அதிரடியால் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கைதான ஐ.பி.எஸ் அதிகாரி!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை குஜராத் சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்த வழக்கு தொடங்கி 22 ஆண்டுகள் ஆன நிலையில், சஞ்சீவ் பட் கைதாகியிருப்பது வழக்கில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி 

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், கடந்த 1996-ம் ஆண்டு குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்துள்ளார். அப்போது, சட்ட விரோதமாக 1 கிலோ போதைப் பொருளைக் கடத்தியதாக சுமர்சிங் மற்றும் ராஜ்புரோஹித் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். இதில் ராஜ்புரோஹித் என்பவர், பலன்பூர்  நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருளுடன் பிடிபட்டார் என போலீஸார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதனிடையே, இந்த வழக்கை ராஜஸ்தான் போலீஸாரும் விசாரித்துவந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், ராஜ்புரோஹித் அப்பாவி என்றும், அவரைக் குற்றவாளியாக பனாஸ்கந்தா போலீஸார் சித்திரித்துவிட்டனர் என்றும் தெரிவித்தனர். அதோடு, பனாஸ்கந்தா போலீஸாரால் ராஜ்புரோஹித் கடத்தப்பட்டு, ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டார் எனவும் தெரிவித்தனர். 

இந்த வழக்கு விசாரணை குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கை, சி.ஐ.டி-க்கு மாற்றிய நீதிமன்றம், மூன்று மாதத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என ஜூன் மாத தொடக்கத்தில் உத்தரவிட்டது.  அதன்பின்னர், வழக்கை கையில் எடுத்த சி.ஐ.டி அதிகாரிகள், தற்போது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டைக் கைதுசெய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலில் சஞ்சீவிக்கும் தொடர்புடையதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், 22 ஆண்டுகளாக இழுபறியில் இருந்தது முடிவுக்குவரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக, உரிய அனுமதியின்றி விடுப்பு எடுத்த காரணத்துக்காக, கடந்த 2015-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் சஞ்சீவ் பட் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். பா.ஜ.க ஆட்சிகுறித்து ட்விட்டரில் சஞ்சீவ் பட் தொடர்ச்சியாக விமர்சனம் செயதுவந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!